ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது; இலங்கை கடற்படையினர் அட்டூழியம் மீனவர்கள் சாலை மறியல்
ராமேஸ்வரம் : நடுக்கடலில் மீன்பிடித்த ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.நேற்றுமுன்தினம் (செப்., 28ல்) ராமேஸ்வரத்தில் இருந்து 309 விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வழக்கம்போல் மீன்வளம் நிறைந்த இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர். அங்கு 3 கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர். பீதியடைந்த மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடிக்காமல் கடலில் வீசிய வலையை படகில் இழுத்து வைத்துக் கொண்டு படகுடன் நாலாபுறமும் சென்றனர்.அப்போது உயிர்த்தராஜ், செல்வம் ஆகியோரது படகில் இருந்த மீனவர்கள் வலையை இழுக்க தாமதம் ஆனதால் ஆத்திரமடைந்த இலங்கை வீரர்கள் இருபடகையும் மடக்கி பிடித்தனர். பின் படகில் இருந்த மீனவர்கள் மார்க்மிலன் 37, மில்டன்49, ரொனால்ட்48, சேசுராஜா45, சுரேஷ்45, அருள்தினகரன்24, துரை39, மரியசெடின்26, ஜீவன்பிரைஷர்22, இருதயநிச்சோ26, ஜெபஸ்தியன்38, ராஜீவ்36, விவேக்36, இன்னாச்சி36, சாமுவேல்33, பிரிஜ்சன்31, பாஸ்கரன்30, ஆகிய 17 பேரையும் கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். மீனவர்கள் மீது வழக்கு பதிந்து வவுனியா சிறையில் அடைத்தனர். மீனவர்கள் மறியல்
17 பேரை விடுவிக்கக்கோரி நேற்று ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்களின் உறவினர்கள், மக்கள் மறியல் செய்தனர். இவர்களை போலீசார் சமரசம் செய்தனர். இம்மறியல் 30 நிமிடம் நடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.