| ADDED : நவ 29, 2024 03:24 PM
சென்னை: புயல், மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளுடன் தயாராக இருக்கிறோம் என்று சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெங்கல் புயலாக உருமாற இருக்கிறது. புயல் சின்னம் எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.புயல் சின்னம், மழை அறிவிப்பை தொடர்ந்து மாவட்ட நிர்வாகங்கள் முழு வீச்சில் முன்னெச்சரிக்கை பணிகளை தொடங்கி உள்ளன. மாவட்டங்களில் தாழ்வான மற்றும் தண்ணீர் தேங்கக்கூடிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.இந் நிலையில், சென்னையில் நிருபர்களிடம் பேசிய மேயர் பிரியா, மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளுடன் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது; சென்னையை பொறுத்தவரை நவ.29, 30, டிச.1, 2 ஆகிய தேதிகளில் புயல் தாக்கும் என்று கூறியிருந்தனர். ஆகையால் சென்னைக்கு மிக கனமழை இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். ரெட் அலர்ட்டும் கொடுத்துள்ளனர். தென் பகுதியில் புயல் கரையைக் கடக்கும் என்று கூறி உள்ளனர். சென்னைக்கு மழை இருக்கும் என்று கூறி இருக்கின்றனர். மழையாக, புயலாக இருந்தாலும் தயாராக இருக்கிறோம். மாநகராட்சி சார்பாக, தாழ்வான பகுதிகளில் 110 மோட்டார்கள் பொருத்தப்பட்டன. தற்போது கூடுதலாக 60 மோட்டார்கள் வாங்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் மழையால் சேகரமாகும் குப்பைகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 28,000 பணியாளர்கள் தற்போது பணியில் உள்ளனர். மழைக்காலத்தின் போது வார்டு ஒவ்வொன்றிலும் கூடுதலாக 10 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தன்னார்வலர்களும் பணியில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.