உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு மாதமாக காத்திருப்பு பட்டியலில் 21 ஆர்.டி.ஓ.,க்கள்: பணிகள் பாதிப்பு

ஒரு மாதமாக காத்திருப்பு பட்டியலில் 21 ஆர்.டி.ஓ.,க்கள்: பணிகள் பாதிப்பு

சென்னை : தமிழகத்தில், 21 வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருப்புப் பட்டியலில் இருக்கின்றனர். இதனால், ஓட்டுநர் உரிமம் வழங்குவது, வாகனப் பதிவு உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வாகன வரி வசூல்

தமிழகத்தில் மொத்தம், 91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், 56 யூனிட் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு, ஓட்டுனர் உரிமம், வாகனங்களுக்கு பதிவு எண் வழங்குதல், வாகன உரிமையாளர்களின் பெயர் மாற்றம், உரிமம் புதுப்பித்தல், வாகன வரி வசூல் உட்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன. ஆட்கள் பற்றாக்குறையால், ஓட்டுனர் உரிமம், உரிமம் புதுப்பிப்பு உள்ளிட்ட ஆவணங்கள் பெற, பல நாட்கள் தாமதம் ஏற்படுகிறது. இதற்கிடையே, 21 வட்டார போக்குவரத்து அதிகாரிகள், ஒரு மாதமாக காத்திருப்புப் பட்டியலில் இருப்பது, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில், பாதிப்பை அதிகப்படுத்தி உள்ளது.இதுகுறித்து, வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் சிலர் கூறியதாவது: வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில், பணிகள் பல மடங்கு அதிகரித்து வருகின்றன. ஆனால், ஆட்களை கூடுதலாக நியமனம் செய்வதில்லை. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உட்பட, அனைத்து வகை பணிகளிலும், 30 முதல் 40 சதவீதம் காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. சமீபத்தில் பணியிட மாற்றம் செய்தபோது, 21 வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டனர்.

நடவடிக்கை

ஒரு மாதம் கடந்த நிலையில், அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இதற்கு, நிர்வாகம் தரப்பில் பல காரணங்கள் கூறப்படுகின்றன. வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில், பொதுமக்களுக்கான சேவையை பாதிப்பின்றி வழங்க, போக்குவரத்துத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

காத்திருப்பு பின்னணி

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், ஏ, பி, சி, என, மூன்று நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதிக பணிகள் உள்ள பெரிய அலுவலகம் 'ஏ', நடுத்தர அளவில் பணி இருப்பது 'பி', குறைந்த அளவில் பணி நடப்பது 'சி' என, பிரிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறையின்படி, எந்த அலுவலக நிலையில் பணியாற்றுகின்றனரோ, அதே நிலையிலான அலுவலகத்திற்கு, பணியிட மாற்றம் செய்ய முடியாது. இதன் காரணமாக, பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு, உடனடியாக புதிய பணியிடம் ஒதுக்கப்படவில்லை என, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

லாரிடிரைவர்ராஜ்கண்ணு
பிப் 18, 2025 10:23

அய்யோ அய்யோ மாமூல் வருமானம் பாதிக்குதே. ஏஜெந்ட்கள் மூலமாகவே லைசன்ஸ் இத்யாதி கொடுப்பதால் யாருமே பிடிபட வாய்ப்பே இல்லியே...


rama adhavan
பிப் 18, 2025 08:28

லஞ்ச பேய்கள். அனைவரும் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்.


S.V.Srinivasan
பிப் 18, 2025 07:56

இவங்க ஆட்சியில் இருக்கிற முக்கியமான பிரச்சனைகளை கண்டுக்க மாட்டேங்கிறாங்க. என்னவோ மும்மொழி கொள்கை இருமொழி கொள்கை, ஈமு கோழி கொள்கைன்னு பிரச்னைகளை மடைமாற்றுவதிலேயே குறியா இருக்கானுவ. இவங்களுக்கு தீர்க்க முடியாத பிரச்சினை எழுந்த உடனே மத்திய அரசு மீது என்ன பழியே போடலாம்னு யோசனை செஞ்சு அப்படியே திசை மாத்திடறாங்க. கடவுள்தான் தமிழத்தை காப்பாற்றணும்.


Ram Moorthy
பிப் 18, 2025 07:03

ஒருவேளை பதவியில் இருந்த போது லஞ்சம் கமிஷன் வாங்கியவர்களா அதற்கு தான் பதவி வழங்கப்படவில்லையா ஏதோ மர்மம் இருக்கிறது


புதிய வீடியோ