நான்கு மாவட்டங்களில் 277 ஏரிகள் நிரம்பின
சென்னை: சூறாவளியுடன் மழை பெய்த போதும், பாலாறு வடிநில கட்டுப்பாட்டில் உள்ள, 1,644 ஏரிகளில், 277 ஏரிகள் மட்டும் நிரம்பி உள்ளன.வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயலால், தமிழகம் முழுதும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில், 47 சதவீதமாக இருந்த தண்ணீரின் அளவு, 54 சதவீதமாக உயர்ந்துள்ளது.பாலாறு வடிநில கட்டுப்பாட்டின் கீழ், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில், 1,644 ஏரிகள் உள்ளன. இவற்றில், 141 ஏரிகள் நேற்று முன்தினம் நிரம்பின. நேற்று, 136 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளன. இதுவரை மொத்தம், 277 ஏரிகள் மட்டுமே நிரம்பியுள்ளன என, நீர்வளத்துறை தெரிவித்து உள்ளது.