தமிழகத்தில் பெஞ்சல் புயலில் 2,991 கால்நடைகள் உயிரிழப்பு
சென்னை:'தமிழகத்தில், 'பெஞ்சல்' புயலில், 2,991 கால்நடைகள் மற்றும் 2.60 லட்சம் பறவைகள் உயிரிழந்துள்ளன' என, தமிழ்நாடு கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், 'பெஞ்சல்' புயல் காரணமாக, விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி உட்பட பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில், பசு, எருது, கன்று, ஆடு என, 2,991 கால்நடைகள்; சேவல், கோழி, கின்னிக்கோழி, வான்கோழி, வாத்து என, 2 லட்சத்து 60,336 பறவை இனங்கள் உயிரிழந்துள்ளன.இதனால், 1,284 கால்நடை உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழக கால்நடைத்துறை சார்பில், கடலுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், 1,679 புயல் நிவாரண முகாம்கள் நடத்தப்பட்டன. இதில், 347 மருத்துவ குழுவினர், ஒரு லட்சத்து 73,668 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.முகாமில், ஒரு லட்சத்து 96,570 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம்; ஒரு லட்சத்து 23,285 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்காக, 12.42 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு, 5.14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 33,084 கிலோ சத்து கலவை மற்றும் பசுந்தீவனம் வழங்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் உயிரிழந்த கால்நடைகளுக்கு, நிவாரண நிதி பெற, உயிரிழந்த கால்நடையை, அப்பகுதியில் உள்ள வி.ஏ.ஓ., முன்னிலையில் உடற்கூறாய்வு செய்து, வெள்ள பாதிப்பில் தான் இறந்தது என உறுதி சான்றிதழ் பெற வேண்டும். அதன்பிறகு நிவாரண நிதி வழங்கப்படும். இறந்த கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, 7.33 கோடி ரூபாய் நிவாரணம், அரசிடம் கோரப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
வெள்ள பாதிப்பால் இறந்த கால்நடைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட நிவாரண தொகை:
கால்நடைகள் - நிவாரணம் (ரூபாயில்)பசு, எருமை - 37,500குதிரை, எருது - 32,000கன்று, கழுதை - 20,000ஆடு, செம்மறி ஆடு, பன்றி - 4,000கோழி, வாத்து - 100