உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமெரிக்க டாலர் விற்பதாக ரூ.16.28 லட்சம் மோசடி: கடலுார், தேனியை சேர்ந்த 3 பேர் கைது

அமெரிக்க டாலர் விற்பதாக ரூ.16.28 லட்சம் மோசடி: கடலுார், தேனியை சேர்ந்த 3 பேர் கைது

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் நந்தகோபால், 38; தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்தாண்டு மார்ச் 7ல், சமூக வலைதளமான 'இன்ஸ்டாகிராமில்' வந்த விளம்பரத்தை பார்த்து, 'டெலிகிராம்' செயலி வாயிலாக, தீபிகா என்ற ஐ.டி.,யில் உரையாடல் நடத்தியுள்ளார். அப்போது, அவருக்கு பதில் அளித்த மர்ம நபர், 'அமெரிக்க டாலரில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்' என கூறியுள்ளார். இதை உண்மை என நம்பி, மர்ம நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு நந்தகோபால், 6.88 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளார்.'முதலீடு செய்த இந்த தொகையை திரும்ப பெற, மேலும் 7.62 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்' என, மர்ம நபர் கூறியுள்ளார்.அதிர்ச்சியடைந்த நந்தகோபால், சென்னை வடக்கு மண்டல சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.கடலுார் மாவட்டம், மேலிருப்பு பகுதியைச் சேர்ந்த சீத்தாராமன், 37; செந்தில்நாதன், 28, ஆகியோர், சமூக வலைதளத்தில் பெண்கள் போல 'சாட்டிங்' செய்து, மோசடியில் ஈடுபட்டு வருவதை போலீசார் கண்டுபிடித்தனர். இவர்கள் தான் நந்தகோபாலிடம் பண மோசடி செய்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் நேற்று கைது செய்தனர்.மற்றொரு சம்பவம்சென்னையைச் சேர்ந்தவர் ரப்பானி கான், 26. இவர் கடந்தாண்டு ஆக., 22ம் தேதி, 'டெலிகிராம்' செயலியில் வந்த விளம்பரத்தை பார்த்து, அதில் தெரிவிக்கப்பட்ட மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார்.எதிர்முனையில் பேசிய நபர், 'அமெரிக்க டாலர்களை குறைந்த விலைக்கு விற்று வருகிறேன்; அதை நீங்கள் வாங்கி, அதிக விலைக்கு விற்கலாம்' என, கூறியுள்ளார்.இதை நம்பி, அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு, ரப்பானி கான், 9.40 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளார். அதன் பின்னர், அந்த நபர் தொடர்பை துண்டித்து விட்டார்.இது குறித்து, சென்னை கிழக்கு மண்டல சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். பண மோசடியில் ஈடுபட்ட, தேனி மாவட்டம், பண்ணைபுரத்தைச் சேர்ந்த லோகநாதன், 23, என்பவரை நேற்று கைது செய்தனர்.இந்த இரண்டு சம்பவங்களிலும், 16.28 லட்சம் ரூபாய் மோசடி செய்த மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி