"கல் கேபிள்ஸ் மனு: ஐகோர்ட் தள்ளுபடி : அனுமதி பெறாமல் கேபிள் சேவை நடத்தி அரசுக்கு எதிராக மனு!
சென்னை : 'கேபிள் டிவி' தொழிலில் குறுக்கிட அரசுக்கு தடை விதிக்கக் கோரி, 'கல்' கேபிள்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
ஐகோர்ட்டில், 'கல்' கேபிள்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு: தமிழக அரசு, புதிதாக, 'கேபிள் டிவி' கார்ப்பரேஷனை, கடந்த 2ம் தேதி துவக்கியது. இதற்கு உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. அதற்காக, எங்கள் கேபிள்களை துண்டித்து, அதை பயன்படுத்தி அவர்களின் சேனல்களை ஒளிபரப்புகின்றனர். இதுகுறித்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. எங்கள், 'கேபிள் டிவி' தொழிலில் குறுக்கிட அரசுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் தரப்பில், 'டிராக்' வாடகை செலுத்தியதற்கான ரசீது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டப்படி அளிக்கப்பட்ட விண்ணப்பமோ, கமிஷனர் அளித்த அனுமதியோ, என்.ஓ.சி.,யோ தாக்கல் செய்யவில்லை. 'டிராக்' வாடகைக்கான ரசீது பெற்றிருப்பதால், அனுமதி கிடைத்தது போல் தான் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு, எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றால் அனுமதி மற்றும் என்.ஓ.சி., கிடைத்தது போல் தான் என விதிகளில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. விதிகளின்படி, 'கேபிள் டிவி' நெட்ஒர்க்கை மனுதாரர் நடத்தவில்லை என அட்வகேட்-ஜெனரல், தன் நியாயத்தை குறிப்பிட்டார்.
இந்த ரிட் மனு விசாரணைக்கு உகந்ததல்ல. மனுதாரருக்கு உள்ள நிவாரணம் என்னவென்றால், கேபிள் உரிமையை நிரூபிக்க, சிவில் அமைப்பை அணுகலாம். தன் கேபிளை யாரும் துண்டித்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கலாம். இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.