மருத்துவ படிப்புக்கு 35,000 பேர் பதிவு
சென்னை:எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 35,000 பேர் விண்ணப்பித்து உள்ளனர். தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 9,200 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 2,150 பி.டி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. இதற்கு, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில், கடந்த 6ம் தேதி விண்ணப்பப் பதிவு துவங்கியது. இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன், விண்ணப்பப் பதிவு துவக்கப்பட்டதால், மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் அதிகரித்துள்ளது.இந்நிலையில், ஆறு நாட்களில், 35,000 பேர் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 22,428 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 'நீட்' தேர்வு முடிவுகள் வெளியாகும் போது, விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.