உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருவாய் நீதிமன்றங்களில் 3,599 வழக்குகள் நிலுவை

வருவாய் நீதிமன்றங்களில் 3,599 வழக்குகள் நிலுவை

சென்னை: தமிழகத்தில், 10 இடங்களில் செயல்படும் வருவாய் நீதிமன்றங்களில், 3,599 வழக்குகள் நிலுவையில் உள்ளன.தமிழகத்தில் நிலம் தொடர்பான விவகாரங்களில், வருவாய் துறை தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும். குறிப்பாக நில உரிமை தொடர்பான விஷயங்களில், வருவாய் துறைக்கே அதிக அதிகாரம் உள்ளது. நிலத்துக்கு பட்டா வழங்குவது, வரி விதிப்பு, நிலம் வகைப்படுத்துதல், நில உரிமை மாற்றம் தொடர்பான விவகாரங்களில் ஆட்சேபனை இருந்தால், பொது மக்கள் வருவாய் துறையை அணுகுகின்றனர். இதில் வழக்கமான பணிகளுடன் மக்களின் ஆட்சேபனைகளை விசாரிப்பதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படும். எனவே, இதுபோன்ற விவகாரங்களை விசாரிக்க, தமிழகத்தில் திருச்சி, லால்குடி, மன்னார்குடி, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலுார், மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் வருவாய் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.இவை, நில உரிமை, குத்தகை, பட்டா வழங்கல் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கின்றன. இவற்றில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று, வருவாய் துறை உத்தரவிட்டு உள்ளது. எனினும், தற்போதைய நிலவரப்படி, 3,599 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது குறித்து, வருவாய் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் வருவாய் நீதிமன்றங்களில், 2024 மார்ச் 31 நிலவரப்படி, 3,221 வழக்குகள் நிலுவையில் இருந்தன. கடந்த 2024 ஏப்., 1 முதல், 2025 மார்ச் 31 வரையிலான காலத்தில், புதிதாக 2,443 வழக்குகள் பதிவாகின. இவற்றில், 2,065 வழக்குகள் விசாரித்து முடிக்கப்பட்டன. தற்போதைய நிலவரப்படி, 3,599 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு மார்ச் நிலவரத்துடன் ஒப்பிட்டால், தற்போது, 378 வழக்குகள் கூடுதலாக நிலுவையில் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ