உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அக்டோபரில் 36 சதவீதம் கூடுதலாக மழை : வானிலை மையம் தகவல்

அக்டோபரில் 36 சதவீதம் கூடுதலாக மழை : வானிலை மையம் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில், கடந்த மாதம், இயல்பை விட 36 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தின் ஆண்டு மழை தேவையில், பெரும்பகுதி வடகிழக்கு பருவமழை காலத்தில் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் என, மூன்று மாதங்களில், 44 செ.மீ., மழை பெய்யும். அக்டோபரில் மட்டும், 18 செ.மீ., அளவுக்கு மழைப்பொழிவு இருக்கும்.நடப்பாண்டு அக்., 16ல் வடகிழக்கு பருவமழை துவங்கியது. எனினும், அக்., 1 முதல் பெய்யும் மழை வடகிழக்கு பருவமழை கணக்கில் சேர்க்கப்படுகிறது. இதன்படி, அக்டோபர் மாதத்தில், 18 செ.மீ., என்ற இயல்பான அளவை விட, 23 செ.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது. இது, 36 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இயல்பை விட, 25 சதவீதம் கூடுதலாக மழை பெய்தது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில், 27 செ.மீ., அக்டோபர் மாத இயல்பான மழை அளவு; ஆனால், 35 செ.மீ., பெய்தது. இது இயல்பை விட, 29 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு சென்னையில் அக்டோபர் மாதத்தில், 35 சதவீதம் கூடுதலாக மழை பெய்தது.வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:தாய்லாந்து, தெற்கு மியான்மர் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதியில், வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், அடுத்த இரண்டு நாட்களில், மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். எனினும், இதனால் தமிழகத்தில் நேரடி தாக்கம் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் வறண்ட வானிலை காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.நாளை மறுநாள் முதல், சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நவம்பரில் மழை குறையும்வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த அறிக்கையை, இந்திய வானிலை துறை ஒவ்வொரு மாதமும் வெளியிடும். அந்த வகையில், நவம்பர் மாதத்துக்கான நீண்டகால வானிலை அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில், நவம்பர் மாதத்தில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், இயல்பை விட குறைவாக மழை பதிவாக வாய்ப்புள்ளது என, தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை