சட்ட விரோதமாக பச்சை பட்டாணி இறக்குமதி சுங்கத்துறை அதிகாரிகள் உட்பட 5 பேர் கைது
சென்னை,:சென்னை துறைமுகத்தில், சட்டவிரோதமாக 2 கோடி ரூபாய் மதிப்பிலான, பச்சை பட்டாணியை இறக்குமதி செய்ய உதவிய, துறைமுக சுங்கத்துறை ஏற்றுமதி பிரிவு அதிகாரிகள் மூவர் உட்பட ஐந்து பேரை, மத்திய வருவாய் புலானய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில், சென்னை துறைமுகம் முக்கியமானது. இங்கு உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும், பல ஆயிரம் டன் பொருட்கள், கன்டெய்னரில் வருகின்றன. அதேபோல், வெளிநாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.வெளிநாடுகளில் இருந்து வரும் கன்டெய்னரில், சம்பந்தப்பட்ட நிறுவனம் அனுப்பிய பொருட்கள்தான் வந்துள்ளதா என, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்வர். அதன்பிறகே, அவற்றை வெளியே எடுத்து செல்ல, அனுமதி அளிப்பர். இந்நிலையில், துபாய் வழியாக சென்னைக்கு கப்பலில், சட்ட விரோதமாக பச்சை பட்டாணிகள் வந்துள்ளதாக, மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு, சில தினங்களுக்கு முன்பு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை அமைத்த அதிகாரிகள், துறைமுகத்திற்கு வந்த கப்பல்களில் இருந்த கன்டெய்னர்களை சோதனை செய்தனர்.சந்தேகத்திற்குரிய கன்டெய்னரில், 'மசூர் பருப்பு' என பெயரிடப்பட்டு இருந்தன. அவற்றை பிரித்து உள்ளே சோதனை செய்தபோது, பச்சை பட்டாணி 100 டன் அளவில், ஐந்து கன்டெய்னர்களில் இருந்தது; அதன் மதிப்பு 2.2 கோடி ரூபாய். இதையடுத்து, அவற்றை வெளியில் எடுத்து செல்ல அனுமதி அளித்த சுங்கத்துறை துணை அதிகாரி, இன்ஸ்பெக்டர், கண்காணிப்பாளர் ஆகியோரை, மத்திய வருவாய் புலானய்வு அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், பட்டாணியை வெளியில் எடுத்துச் செல்ல உதவிய ஏஜன்ட் மற்றும் டில்லியை சேர்ந்த பெண் இறக்குமதியாளர் ஆகியோரும், கைது செய்யப்பட்டனர்.இது குறித்து மத்திய வருவாய் புலானய்வு அதிகாரிகள் கூறியதாவது:வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, டி.ஜி.எப்.டி., எனும் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம், வரைமுறைகளை வகுத்துள்ளது. அதில் எந்த பொருட்களை, எந்த துறைமுகங்கள் வழியாக எடுத்து வரலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. பச்சை பட்டாணியை, கோல்கட்டாவில் உள்ள துறைமுகம் வழியாகத்தான் இறக்குமதி செய்ய வேண்டும். ஆனால், பருப்பு எனக் கூறி சென்னையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. இதற்கு உதவிய சுங்கத்துறை அதிகாரிகள், ஏஜன்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்கத்துறை அதிகாரிகள் குடியிருப்புகளில், சோதனை செய்ததில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், சுங்கத்துறை ஏற்றுமதி பிரிவு உயர் அதிகாரி உள்ளிட்ட சிலரை, கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.