தஞ்சையில் 50 இலவச பட்டாக்கள் ரத்து: போலி ஆவண புகாரில் அரசு நடவடிக்கை
சென்னை: தஞ்சை மாவட்டத்தில், போலி ஆவணங்கள் கொடுத்து பட்டா பெறப்பட்டதாக எழுந்த புகாரை விசாரித்த வருவாய் துறை அதிகாரிகள், 50 இலவச பட்டாக்களை ரத்து செய்துள்ளனர். தமிழகத்தில், அரசுக்கு ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம், 2006ல் துவங்கியது. புகார் எழுந்தது இதன்படி, புறம்போக்கு நிலங்களில், 10 ஆண்டுக்கு மேலாக வசிப்போருக்கு, இலவச பட்டாக்கள் வழங்கப் படுகின்றன. ஆனால், வருவாய் து றையின், உள்ளூர் அதிகாரிகள் துணையுடன், வசதியான மக்களும் இத்தகைய பட்டாக்களை பெறுவதாக புகார் எழுந்தது. போலி ஆவணங்கள் அடிப்படையில், இது போன்ற பட்டாக்கள் வழங்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து, சென்னை ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த ஸ்ரீராம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் தாலுகா கதிராமங்கலம் கிராமத்தில், ஸ்ரீ வைஷ்ணவி அறக்கட்டளை சார்பில், ஒரு மனை திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதில், அறக்கட்டளை தலைவர் கே. வெங்கடசுப்ரமணியன், பொருளாளர் பத்மா, உறுப்பினர்கள் வைஷ்ணவி, வினோத் குமார் மற்றும் பணியாளர்கள், போலி ஆவணங்கள் அளித்து, பட்டா பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து, தகவல் அறியும் உரிமை சட்டப்படி விண்ணப்பித்து பெறப்பட்ட, விபரங்கள் அடிப்படையில், கதிராமங்கலம் கிராமத்தில், நத்தம் நிலங்களுக்கு, வெங்கடசுப்ர மணியன், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், வீட்டு பணியாளர்கள் பெயரில், மோசடியாக இலவச பட்டாக்கள் பெறப்பட்டது தெரியவந்தது. கதிராமங்கலம், கூத்தனுார், பாபநாசம், உள்ளிக்கடை பகுதிகளில், இவர்கள் பெயரில், 100க்கும் மேற்பட்ட பட்டாக்கள் மோசடியாக வழங்கப்பட்டு உள்ளன. இதுபற்றி வருவாய் துறையில் புகார் அளித்தோம் . தற்போது, அந்த பட்டாக்களை வருவாய் துறையினர் ரத்து செய்துள்ளனர். பிற பகுதிகளில், போலி பட்டாக்கள் குறித்த விசாரணை முடுக்கி விடப்பட்டது . இவ்வாறு அவர் கூறினார். விசாரணை இதுதொடர்பாக தஞ்சை மாவட்டம், கும்பகோணம் உதவி கலெக்டர் ஹிருத்யா எஸ்.விஜயன் பிறப்பித்த உத்தரவு: தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா உள்ளிக்கடை கிராமத்தில், அரசு நத்தம் புறம்போக்கு நிலங்களுக்கு, போலி ஆவணங்கள் அடிப்படையில், பட்டா வழங்கப்பட்டதாக புகார் வந்தது. இதுகுறித்து, அந்த கிராமத்தில் பட்டா பெற்ற நபர்களிடம், விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் தாசில்தார் அறிக்கை அடிப்படையில், நத்தம் நிலவரி திட்டத்தில், உள்ளிக்கடை கிராமத்தில், இரண்டு சர்வே எண்களுக்கு உட்பட்ட நிலம், 50 பேருக்கு போலியாக பட்டா வழங்கப்பட்டது தெரிகிறது. அவர்கள் இலவச பட்டா பெற தகுதியற்றவர்கள் என்பதும், இது தொடர்பான விதிகளுக்கு உட்படாமல், வெளியாருக்கு நிலத்தை விற்பனை செய்துள்ளதும் தெரிகிறது. எனவே, அவர்கள், 50 பேருக்கு வழங்கப்பட்ட இலவச பட்டாக்கள் ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.