சாலையில் கிடந்த இரும்பு தகடு பஞ்சரான 50 வாகனங்கள்
வாஷிம், மஹாராஷ்டிராவில் மும்பை - நாக்பூர் நெடுஞ்சாலையில் விழுந்த இரும்பு தகடு மீது ஏறிச்சென்ற, 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் பஞ்சராகி நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மஹாராஷ்டிராவின் மும்பை - நாக்பூர் இடையே அமைந்துள்ள நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.வாஷிம் மாவட்டத்துக்கு உட்பட்ட மாலேகான் - வனோஜா சுங்கச்சாவடி இடையே உள்ள இந்த நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில், கடந்த மாதம் 29ம் தேதி இரவு சென்ற வாகனங்கள் அடுத்தடுத்து பஞ்சராகி நடுவழியில் நின்றன. இதனால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். கார், லாரி, கனரக வாகனங்கள் என 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையாக நின்றதால், அந்த சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.தகவலறிந்து வந்த போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த சாலையில் ராட்சத இரும்பு தகடு கிடந்ததை கண்டறிந்தனர். அதில், கூர்மையான ஆணிகள் இருந்ததால், அந்த தகடின் மீது வேகமாக ஏறிச்சென்ற வாகனங்கள் பஞ்சராகி நின்றதாக கூறப்படுகிறது. சாலையில் விழுந்த ராட்சத இரும்பு தகடை, தனி நபர்களால் அகற்ற முடியவில்லை. நீண்டநேர போராட்டத்துக்கு பின் கிரேன் உதவியுடன் இரும்பு தகடை அதிகாரிகள் அகற்றினர்.