மதுரை: விழுப்புரத்தில் மணல் குவாரி உரிமம் வாங்கித்தருவதாக கூறி முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ பெயரை பயன்படுத்தி ரூ.6.80 கோடி மோசடி செய்ததாக மதுரை அ.தி.மு.க., கவுன்சிலர் மாயத்தேவன் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் டி.நல்லாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரணவன் 51. என்.எஸ்.ஆர்., ப்ளூ மெட்டல் என்ற பெயரில் கிரஷர் தொழில் செய்து வருகிறார். இவரது பேஸ்புக் நண்பர் மதுரை நேரு நகர் சங்கரி, அவ்வப்போது அரசியல் பிரமுகர்களுடன் இருக்கும் படங்களை பதிவிடுவார். அதில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ படத்தை பார்த்து சரவணன் கேட்டபோது, 'அவரும், மனைவி ஜெயந்தியும் எனக்கு மிகவும் நெருக்கம். நான் சொன்னால் எந்த வேலையாக இருந்தாலும் செய்து கொடுப்பார்கள்' என்றார். இதை நம்பி தனக்கு விழுப்புரத்தில் மணல் குவாரி எடுக்க உதவுமாறு சரவணன் கேட்டார். 2020 மார்ச்சில் திண்டிவனம் வந்த சங்கரி மற்றும் அவரது கூட்டாளிகள் செல்வம், மகா, மாரி ஆகியோர் சந்தித்தினர். சங்கரி யாரிடமோ பேசிவிட்டு சரவணனிடம் செல்லுார் ராஜூ பேசுவதாக கூறி கொடுத்தார். அதில் பேசிய நபர், 'உறுதியாக குவாரியை எடுத்து தருகிறேன்' என்றார்.இரண்டு நாள் கழித்து பேசிய சங்கரி, முன்பணமாக ரூ.25 லட்சம் எடுத்துக்கொண்டு மதுரை வருமாறு கூறினார். 2020 ஏப்ரலில் மதுரை வந்த சரவணன், சங்கரியை தேடிச்சென்றபோது அங்கு அவருடன் இருந்த மாயத்தேவன், பிருந்தாவை 'செல்லுார் ராஜூவின் உறவினர்' என அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் சரவணனை செல்லுார் ராஜூவின் வீட்டிற்கு அழைத்துச்செல்வது போல் அழைத்துச்சென்று 'அவர் வீட்டில் இல்லை' என நம்ப வைத்தனர். பின்னர் செல்லுார் ராஜூவின் மனைவி ஜெயந்தி என்றுக்கூறி போனில் பேசிய பெண், 'அட்வான்ஸ் தொகையை சங்கிரியிடம் கொடுத்துவிடுங்கள். ஒருமாதத்தில் குவாரியை எடுத்து தருகிறோம்' என்றார். பணத்தை சங்கரியிடம் கொடுத்து விட்டு சரவணன் சென்றார். 'கொலை' மிரட்டல்
சில நாட்கள் கழித்து சங்கரி கொடுத்த மற்றொரு நம்பருக்கு சரவணன் பேசியபோது பிருந்தா போனை எடுத்து, சங்கரி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்துள்ளதாகவும், மறுநாள் பேச சொல்கிறார் என்றார். மறுநாள் பிருந்தாவை தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து சரவணனிடம் பேசிய சங்கரி 'பிருந்தாவை யாரோ வெட்டி கொன்று விட்டனர். கடைசியாக நீங்கள் தான் தான் அவரிடம் பேசியுள்ளீர்கள். உங்களை தான் போலீஸ் சந்தேகப்படுகிறது. இந்த கேஸில் இருந்து உங்களை தப்ப வைக்க செல்லுார் ராஜூ, மாயத்தேவன் நினைத்தால் தான் முடியும். அதற்கு பணம் வேண்டும். இல்லையென்றால் உங்களையும், உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களையும் இந்த கொலை கேஸில் சேர்த்து விடுவார்கள்' என மிரட்டினார். இதனால் பயந்த சரவணனிடம் சங்கிரி மேலும் ரூ.25 லட்சம் கேட்டார். 2020 செப்.,ல் மதுரை வந்து சங்கரி மற்றும் செல்வம், மாயத்தேவன், மகா, மாரி ஆகியோரிடம் சரவணன் பணம் கொடுத்தார்.இப்படி பல தவணைகளில் பலரிடம் கடன் பெற்று சரவணன் மொத்தம் ரூ.6.80 கோடி கொடுத்த நிலையில் மோசடி செய்யப்பட்டார். கடன் பிரச்னையால் தற்கொலைக்கும் முயன்றார். பணத்தை கேட்டபோது மிரட்டப்பட்டார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் புகார் அளித்தார். அதில், மாயத்தேவன் அ.தி.மு.க., கவுன்சிலர் எனக்குறிப்பிட்டுள்ளார். மாயத்தேவன் செல்லுார் அகிம்சாபுரம் வார்டு கவுன்சிலராக உள்ளார். இதைதொடர்ந்து சங்கிரி, மாயத்தேவன் உட்பட 5 பேர் மீது மோசடி உட்பட 3 பிரிவுகளின்கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.