திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணி மற்றும் ஊரக வளர்ச்சித் துறைக்கு உட்பட்ட, 917 ஏரிகளில், 214 ஏரிகள் மட்டுமே 100 சதவீதம் நிரம்பி உள்ளன. மீதம் உள்ள, 703 ஏரிகள் 50 சதவீதம்கூட இன்னும் நிரம்பாமல் உள்ளன. மாவட்டத்தில், 7 ஒன்றியங்களில் ஒரு ஏரி கூட முழு அளவு நிரம்பாததால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், கொசஸ்தலை ஆற்று நீர்பாசன பராமரிப்பில், 336 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் அனைத்தும், 100 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்டவை.சில ஏரிகள், 450 ஏக்கர் அளவு பரப்பளவு கொண்டுள்ளன. இந்த ஏரி நீர் பாசனத்தை நம்பியே பெரும்பாலான விவசாய நிலங்கள் உள்ளன.இவற்றைத் தவிர, 100 ஏக்கருக்கும் குறைவாக, 581 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளை ஊரக வளர்ச்சித் துறையினர் பராமரித்து வருகின்றன. இதன்படி, மாவட்டம் முழுதும் 917 ஏரிகளை நம்பி விவசாயிகள் உள்ளனர்.3,296 நீர்நிலைகள்
காரணம், பிரதான ஏரிகளான கூவம், ஆரணி மற்றும் கொசஸ்தலை ஆறுகளில் மழை காலத்தில் மட்டுமே தண்ணீர் வரும். நகர, கிராமப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்திற்கு பயன்படும் வகையில், சிறிய அளவிலான, குளம், குட்டை என, 3,296 நீர்நிலைகள் உள்ளன.கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், பாதிக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் நிரம்பியிருந்தன. இதனால், விவசாய பணிகளுக்கு நீர் பற்றாக்குறை இல்லாத நிலை இருந்தது.நடப்பு ஆண்டு இதுவரை போதுமான மழை பெய்யாததால், பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. வடமேற்கு பருவமழை துவங்கி ஒன்றரை மாதத்திற்கு மேலாகியும், குறைந்த அளவிலான மழையே பெய்துள்ளது.இந்த நிலையில் 'பெஞ்சல்' புயல் காரணமாக, மூன்று நாட்களாக பலத்த மழை பெய்தது. இருப்பினும், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் அதி கனமழை இருந்தது. ஆனால், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, பூண்டி, திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த அளவே மழை பெய்துள்ளது.இதனால், பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பாமல் உள்ளன. குறிப்பாக, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 336 ஏரிகளில் 56ம், ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள, 158 என, மொத்தம் 214 ஏரிகள் மட்டுமே 100 சதவீதம் நீர் நிரம்பி உள்ளது.7 ஒன்றியங்களில்...
குறிப்பாக, வில்லிவாக்கம், எல்லாபுரம், திருவள்ளூர், கடம்பத்துார், திருவாலங்காடு, பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை ஆகிய 7 ஒன்றியங்களில், ஒரு ஏரி கூட முழு அளவில் நிரம்பவில்லை. மீதம் உள்ள, 703 ஏரிகளில் 75 - 50 சதவீதத்திற்கும் குறைவான அளவே நீர் நிரம்பி உள்ளது.இதே போல, சிறிய அளவிலான குளம், குட்டை என, 3,296ல், 540ல் மட்டுமே முழு அளவில் நிரம்பி உள்ளது. 743 நீர்நிலைகள் 75 சதவீதமே நிரம்பி உள்ளது.தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே ஏரிகளுக்கும், சிறிய அளவிலான நீர்நிலைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கக் கூடும். இதன் காரணமாக, விவசாயிகள் கடும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.பாசன ஏரிகளில் நீர் இருப்பு விபரம்
துறை மொத்தம் 100 சதவீதம் 75 50 25க்கு மேல்பொதுப்பணி 336 56 57 90 133ஊரக வளர்ச்சி 581 158 106 100 217
ஆக்கிரமிப்பே காரணம்
திருவள்ளூர் மாவட்டத்தில், விவசாய தேவைக்காக பயன்படும் ஏரிகளில் பெரும்பாலானவை ஆக்கிரமிக்கப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது. ஏரிக்குள் நடைபெறும் விவசாய பணிக்காக, தண்ணீர் தேங்காத வகையில் வரத்து கால்வாய் மற்றும் உபரி நீர் வெளியேறும் பகுதியிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.சில ஏரிகளில் மீன் வளர்க்கும் பணிக்காக, ஒப்பந்ததாரர்கள், மீன் வெளியேறாத வகையில், தடுப்பு அமைத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்றி, வரத்து கால்வாய் துார் வாராததாலேயே ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்து விட்டது என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.