தமிழகத்தில் இந்த ஆண்டு 75,702 பேருக்கு காசநோய்
சென்னை:தமிழகத்தில் இந்த ஆண்டு, 75,702 பேருக்கு, காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. காசநோயை அடுத்த ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிப்பதற்காக, மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இதற்காக, தமிழகத்தில் நோயாளிகளை கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சை அளித்தல், தொடர் கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. சளி மாதிரி எடுப்பது, 'எக்ஸ்ரே' படம் எடுப்பது, களப் பணியாளர்கள் வாயிலாக, நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று மருந்துகள் வழங்குவது போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளால், 84 சதவீதம் பேரை, முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்துவதாகவும், மீதமுள்ளோரை தொடர் சிகிச்சையில் குணமாக்குவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தாண்டில் நாடு முழுதும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில், காசநோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு இருந்தோரின் தரவுகளை ஆய்வு செய்ததில், 21 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, 24,685 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 50,837 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுள்ளனர். அந்த வகையில், தமிழகத்தில் இந்த ஆண்டு காசநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 75,702 ஆக உள்ளது. இது, கடந்த ஆண்டை விட மூன்று சதவீதம் குறைவு.