உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 7 மாதங்களில் ரூ.1,015 கோடி சுருட்டிய சைபர் குற்றவாளிகள் 780 பேர் கைது; 16 பேருக்கு குண்டாஸ்

7 மாதங்களில் ரூ.1,015 கோடி சுருட்டிய சைபர் குற்றவாளிகள் 780 பேர் கைது; 16 பேருக்கு குண்டாஸ்

சென்னை:'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்யும் சைபர் குற்றவாளிகள், கடந்த ஏழு மாதங்களில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து, 1,015 கோடி ரூபாயை சுருட்டி உள்ளனர். இதுகுறித்து, சைபர் குற்றப்பிரிவு தலைமையக கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் கூறியதாவது: 'ஆன்லைன்' வாயிலாக மோசடி செய்து வரும் சைபர் குற்றவாளிகள், பகுதிநேர வேலை வாய்ப்பு, ஆன்லைன் முதலீடுகளில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என, பல விதமான ஆசை காட்டி பணத்தை சுருட்டி வருகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டில், ஜனவரி முதல் ஜூலை வரை ஏழு மாதங்களில், தமிழகத்தைச் சேர்ந்த நபர்களிடம் இருந்து, 1,015 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக, 90,977 புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்தி, 59,957 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சைபர் குற்றவாளிகள் மோசடி செய்த, 1,015 கோடி ரூபாயில், 324.62 கோடி ரூபாயை முடக்கி உள்ளோம். அவற்றில், 61.60 கோடி ரூபாயை மீட்டு, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு திரும்ப ஒப்படைத்துள்ளோம். மேலும், பண மோசடி தொடர்பாக, வெளி மாநிலத்தவர்கள் உட்பட, 780 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 16 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக, 'ஆப்பரேஷன் திரை நீக்கு' என்ற அதிரடி நடவடிக்கை வாயிலாக, ஒரே நேரத்தில், 136 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோன்ற கைது நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த ஏழு மாதங்களில், சைபர் குற்றவாளிகள் பண மோசடிக்கு பயன்படுத்திய, 7,629 'சிம் கார்டு'களையும் முடக்கி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ