சென்னை:ரயில் டிக்கெட் அச்சிடும் காகித ரோல் மாயமான விவகாரத்தில், எட்டு ஊழியர்களுக்கு, 13.10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, ரயில்வே ஊழியர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட திருச்சி கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது திருவாரூர் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தில், முன்பதிவு இல்லாத டிக்கெட் வழங்கும் பணியில், எட்டு பேர் பணியாற்றி வருகின்றனர். இங்கு சமீபத்தில் நடத்திய ஆய்வில், முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் அச்சிடும் காகித ரோல் ஒன்று காணாமல் போயிருப்பதை, ஆடிட்டர் கண்டறிந்தார். உடன், திருச்சி ரயில்வே கோட்ட முதன்மை வணிக மேலாளருக்கு புகார் அனுப்பினார். விசாரித்த அதிகாரிகள் குழு, 'டிக்கெட் அச்சிடும் காகித ரோல் காணாமல் போனதற்கு, டிக்கெட் கவுன்டரில் பணிபுரியும் எட்டு ஊழியர்களே பொறுப்பு' என, அறிவித்தது. ரயில் டிக்கெட்டுக்கான ஒரு காகித ரோலில், 500 டிக்கெட்டுகள் வரை அச்சிடலாம். அத்துடன், அதிகபட்சமாக நான்கு பேருக்கு தான் ஒரு டிக்கெட் தருவர். அதிலும், வரிசை எண் இருக்கும். கன்னியாகுமரி முதல்- காஷ்மீர் வரை முன்பதிவில்லாமல் செல்வதற்கு ஒருவருக்கு கட்டணம் 525 ரூபாய். இதை நான்கு பேருக்கு கணக்கிட்டு, ஒரு டிக்கெட் விலை 2,100 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இத்தொகையையும், அபராதத்தையும் கணக்கிட்டு, தலைமை மேற்பார்வையாளர்கள் மூன்று பேருக்கு, தலா, 2.62 லட்சம்; மற்ற ஐந்து ஊழியர்களுக்கு தலா ஒரு லட்சத்து 4,800 ரூபாய் என, மொத்தம், 13.10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, திருச்சி ரயில்வே கோட்டம் உத்தரவிட்டுள்ளது. இது, எட்டு ஊழியர்களிடையே மட்டுமின்றி, அனைத்து ஊழியர்களிடமும், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, டி.ஆர்.இ.யு., சங்கத்தின் மூத்த நிர்வாகி மனோகரன் கூறியதாவது: ஒரு டிக்கெட் தொலைந்தால், அதிகபட்ச டிக்கெட் கட்டணம் வசூலிக்கலாம் என்ற மேம்போக்கான விதியின் அடிப்படையில், ஒரு டிக்கெட் ரோலில் உள்ள, 500 டிக்கெட்டுகளில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் செல்வதற்கான, 2,100 ரூபாய் பயண கட்டண மதிப்பை வசூலிக்க உத்தரவிட்டிருப்பது அபத்தமானது. தொலைந்த ரயில் டிக்கெட் காகித ரோல் மதிப்பு, அதிகபட்சமாக, 100 ரூபாய் இருக்கும். டிக்கெட் ரோலில், கணினி வாயிலாக டிக்கெட் மதிப்பீடு செய்தால் மட்டுமே, அதற்கு மதிப்பு உண்டு. மேலும், தொலைந்த காகித ரோலை, முறைகேடாக பயன்படுத்தியதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. எனவே, இந்த நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.