உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து பெண் உட்பட 8 பேர் பலி; 5 பேர் படுகாயம்

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து பெண் உட்பட 8 பேர் பலி; 5 பேர் படுகாயம்

சிவகாசி: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டி பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், எட்டு தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகினர்; ஐந்து பேர் படுகாயமடைந்தனர். விபத்தில், ஆலையின் எட்டு அறைகள் தரைமட்டமாகின.விருதுநகர் மாவட்டம், சிவகாசி -அருகே சின்னகாமன்பட்டியில், கமல்குமார் என்பவருக்கு சொந்தமான, 'கோகுலேஷ்' பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில், 40க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. வழக்கம் போல நேற்று தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த போது, மருந்து செலுத்தும் அறையில், காலை 8:45 மணி அளவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகே இருந்த எட்டு அறைகள் இடிந்து தரைமட்டமாகின.இதில், மீனம்பட்டியை சேர்ந்த மகாலிங்கம், 55, விருதுநகர், ஓ.கோவில்பட்டி ராமமூர்த்தி, 38, சூலக்கரை வைரமணி, 32, அனுப்பன்குளம் லட்சுமி, 22, செல்லபாண்டி, சேர்வைக்காரன்பட்டி ராமஜெயம், 27, நாகபாண்டி, புண்ணியமூர்த்தி ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தனர்.மேலும், சேர்வைக்காரன் பட்டி அழகுராஜா, 27, சாத்துார் செவல்பட்டி லிங்கசாமி, 45, மத்திய சேனை கருப்பசாமி, 27, வி.ராமலிங்கபுரம் வ.உ.சி., தெரு மணிகண்டன், 40, சூலக்கரை முருகலட்சுமி, 48, ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.சாத்துார் டவுன் போலீசார், ஆலையின் உரிமையாளர் கமல்குமார், இடத்தின் உரிமையாளர் மாயக்கண்ணன், சல்பர் உரிமையாளர் செல்வம், மேலாளர் விஜய் மற்றும் போர்மேன்கள் ரவி, நடராஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில், ரவியை நேற்று கைது செய்தனர்.பட்டாசு ஆலை உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். சம்பவ இடத்தை கலெக்டர் சுகபுத்ரா, எஸ்.பி., கண்ணன் பார்வையிட்டனர்.கலெக்டர் கூறுகையில், “இதுவரை எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்; ஐந்து தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்தும், ஆலையில் விதிமீறல் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வுக்கு பின் தெரியவரும். பட்டாசு ஆலைகளில் விபத்து நடைபெறாமல் தடுக்கும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்,” என்றார்.இதற்கிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா, 50,000 ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

உறவினர்கள் தர்ணா

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியான எட்டு பேரின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிவாரணத்தொகையை பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரப்படி மாநில அரசு, 20 லட்சம், ஆலை நிர்வாகம், 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என, உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். அரசு அதிகாரிகள், போலீசார் பேச்சு நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.https://x.com/dinamalarweb/status/1940244855516799245

சீக்கிரம் நடந்ததால் பலர் தப்பினர்

இந்த ஆலையில், 100க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். பட்டாசு தயாரிக்க முதல் பணியாக மருந்து செலுத்தும் பணியும், எடை போடும் பணியும் நேற்று காலை நடந்தது. இதில், 30 தொழிலாளர்கள் மட்டுமே ஈடுபட்டிருந்தனர். காலை 9:00 மணிக்கு மேல் தான் மற்ற தொழிலாளர்கள் வருவர் என்பதால், பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, உயிர்பலி குறைந்தது. மருந்து செலுத்தும் போது ஏற்பட்ட வெடி விபத்தால் அருகில் இருந்த மற்ற அறைகளில் எடை போட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அதிர்வில் கீழே விழுந்தனர். ஆனாலும், உடனடியாக சுதாரித்து வெளியே ஓடியதால் உயிர் தப்பினர். வெடி விபத்தில் எட்டு அறைகள் தரைமட்டமான நிலையில், கட்டடத்தின் செங்கற்கள் 100 மீட்டர் துாரத்திற்கு பட்டாசு ஆலை வளாகம் முழுதும் சிதறி கிடந்தன. இறந்த தொழிலாளர்கள் ஒரு சிலரின் உடல் பாகங்கள், 50 அடி துாரத்திற்கு மேல் விழுந்து கிடந்தன. இறந்தவர்கள் யார், யார் என உடனடியாக விபரம் தெரியாததால், உறவினர்கள் தவித்து நின்றனர். இரண்டு மணி நேரத்திற்கு பின்பே இறந்தவர்களின் அடையாளம் தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 02, 2025 14:22

பலியான எட்டு பேருக்கும் உடனடியாக அரசுப்பணி ஆணை வழங்கப்படுகிறது.


veeramani
ஜூலை 02, 2025 09:49

பட்டாசு தொழிற்ச்சாலை விபத்து. இது ஒரு தொடர்கதையாகத் தான் உள்ளது. இதனால் பல தமிழ் பேசும் உயிர்கள் சொர்க்கம் சென்றந்தன வெறுமனே பணம் போதுமா? ஒரு CSIR விஞானியின் வேண்டுகோள். பட்டாசு தொழிசாலைகளில் மருந்து வேலைபார்க்கும் இடம், சேமிக்கும் இடம் போன்றவைகள் அரை வட்ட கோலம் கவிழ்த்து இருக்கும் போபோல் எஸ்கிமோக்கள் இஃலு கட்டப்படவேண்டும். கதவுகள் மரம் அல்லது பவுதினால் இருக்கலாம் இதனால் வெடி விபத்து நடந்தாலும் கட்டிடம் இடியாது தமிழ் பேசும் உயிர் காக்கப்படலாம்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 02, 2025 08:32

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும்... கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. தமிழக்தில் மதவாதமோ இந்தியோ நுழையமுடியாது .. சமூகநீதியை திமுக காக்கும் .. விஷ சாராயம் குடித்து செத்திருந்தாலாவது பத்து லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும், உழைக்கும்போது செய்திருக்கிறீர்கள் ..உங்கள் குடும்பத்திற்கு ஆறுதல் மட்டும்தான் .. அதற்குமேல் ஏதாவது பேசினால் பாஜக புகுந்துவிடும் ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை