கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை முற்றுகை போக்குவரத்து தொழிலாளர்கள் 950 பேர் கைது
சென்னை:போக்குவரத்து ஊழியர்களுக்கு, புதிய ஊதிய ஒப்பந்த நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., சார்பில் நேற்று தலைமை செயலக முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, 950 பேரை போலீசார் கைது செய்தனர். அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, 15வது ஊதிய ஒப்பந்த நிலுவை தொகையை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு, 10 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உட்பட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., தொழிற்சங்க போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வூதியர்கள், கடந்த ஆகஸ்ட், 18 முதல் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று பல்லவன் இல்லத்தில் இருந்து, சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன், பொதுச்செயலர் ஆறுமுகநயினார் தலைமையில், போராட்டத்தில் ஈடுபட்டோர் தலைமை செயலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அவர்களை அண்ணா சாலை சந்திப்பில் போலீசார் தடுத்தனர். இதை கண்டித்து, அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, 950 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து, சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன் அளித்த பேட்டி: தமிழகத்தில் வேறு எந்த துறையிலும் இல்லாத வகையில், ஓய்வு பெறும் ஊழியர்கள், வெறும் கையோடு அனுப்பப்படுகின்றனர். பணி ஓய்வு பெற்ற, ஒரு மாத காலத்திற்குள், பணப்பலன்களை வழங்க வேண்டும் என்ற சட்டத்தை அரசு மீறுகிறது. கடந்த, 17 மாதங்களாக, ஓய்வு பெற்றவர்களுக்கு 2,500 கோடி ரூபாயை வழங்காமல் உள்ளது. ஊழியர்களிடம் பிடித்தம் செய்யும் பணத்தை, உரிய நிறு வனங்களில் செலுத்தாமல், 15,000 கோடி ரூபாயை நிர்வாகம் செலவு செய்துள்ளது. இதனால், போக்குவரத்து ஊழியர்களுக்கு வரவேண்டிய பணப்பலன்கள் கிடைக்கவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது; இன்னமும் அமல்படுத்தவில்லை. ஊழியர்களுக்கு கொடுத்த எந்த ஒரு வாக்குறுதியையும் தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. அவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி, 53 நாட்களாக காத்திருக்கும் போராட்டம் நடத்துகிறோம். அரசு தலையிடாத காரணத்தால் மறியல் நடக்கிறது. அரசு தலையிடவில்லை என்றால் தமிழகம் முழுதும் மறியல் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார். கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி சென்னை அண்ணா சாலை எல்.ஐ.சி., அலுவலகம் அருகே இருந்து, நுாற்றுக்கணக்கான ஊழியர்கள், வாலாஜா சாலை வழியாக தலைமைச் செயலகம் நோக்கி சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக, நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்றனர். அவர்களை, பூந்தமல்லி நெடுஞ்சாலை - ஈவ்னிங் பஜார் சாலை சந்திப்பில், போலீசார் தடுத்து கைது செய்தனர். அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அண்ணாசாலை, பல்லவன், பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில், நேற்று காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 30க்கும் மேற்பட்ட மாநகர பஸ்கள், ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அவதிப்பட்டனர் .