உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறையில் வெளிநாட்டு கைதிகளுக்கு அடிப்படை வசதிகள் மறுப்பு என வழக்கு

சிறையில் வெளிநாட்டு கைதிகளுக்கு அடிப்படை வசதிகள் மறுப்பு என வழக்கு

சென்னை: தனிமை சிறையில் அடைக்கப்பட்ட வெளிநாட்டு கைதிகளை இடம் மாற்றி, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, நைஜீரியா நாட்டைச் சேர்ந்த விசாரணை கைதி தாக்கல் செய்த மனுவுக்கு, மத்திய, மாநில அரசு பதிலளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவைச் சேர்ந்த விசாரணை கைதி எக்விம் கிங்ஸ்ட்லி என்பவர் தாக்கல் செய்த மனு:சென்னை புழல் சிறையில் இந்தோனேஷியா, நைஜீரியா, டான்சானியா, ஐவரி கோஸ்ட் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். படுக்கை விரிப்பு, மின் விசிறி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத தனிமை சிறையில், பல மாதங்கள் காரணங்களின்றி அடைக்கப்பட்டு வருகிறோம்.போதிய காரணங்கள் இல்லாமல், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டினர், சிறை அதிகாரிகளால் அவ்வப்போது தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். தினமும், இதுபோல பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறோம்.உரிய நடவடிக்கைசிறைத் துறை எஸ்.பி.,யிடம் கோரிக்கை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. காரணமின்றி தனிமை சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளை, அங்கிருந்து மாற்றி, அவர்களுக்கு உணவு, மருத்துவ சிகிச்சை போன்றவற்றை வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், வெளிநாட்டினரை மோசமாக நடத்திய அதிகாரிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.நதியா வாதாடியதாவது:சிறையில் இருக்கும் உள்நாட்டு கைதிகள், தங்கள் குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், கடந்தாண்டு டிச., 1 முதல் வெளிநாட்டு கைதிகள், தங்கள் உறவினர்களுடன் பேச அனுமதிக்கப்படவில்லை.உள்நாட்டு கைதிகள் தங்கள் உறவினர்களுடன், 'வீடியோ கால்' வாயிலாக பேசும் வசதி உள்ளது; அவர்களுக்கு என வங்கி கணக்கும் உள்ளது. ஆனால், வெளிநாட்டு கைதிகளுக்கு வழங்கப்படவில்லை. தனிமை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அவர் வாதாடினார்.

விபரம் வேண்டும்

சிறை நிர்வாகம் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் வாதாடியதாவது:வெளிநாட்டு சிறை கைதிகளுக்கும் உணவு, மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.தற்போது, தனிமை சிறையில், எந்தவொரு வெளிநாட்டு கைதிகளும் இல்லை. வீடியோ கால் வாயிலாக பேச அனுமதிக்கும் திட்டம் உள்ளது. மத்திய உள்துறை தான், இதை செயல்படுத்துவது குறித்து முடிவெடுக்க முடியும்.இவ்வாறு அவர் வாதாடினார்.இதையடுத்து, இந்த வழக்கில் எதிர்மனுதாரராக மத்திய உள்துறை அமைச்சக செயலரை இணைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், 'மற்ற மாநில சிறைகளில் வெளிநாட்டு கைதிகளுக்கு, என்ன மாதிரியான வசதிகள் உள்ளன? அது தொடர்பான விபரங்களை அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்ய வேண்டும்' என, மத்திய உள்துறை செயலர் மற்றும் மாநில அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், 'வெளிநாட்டு சிறை கைதிகளுக்கான விதிகளை வகுக்க வேண்டும்' எனக் கூறி, விசாரணையை தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி