உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெற்று விளம்பரத்தில் காலம் கழிக்கும் முதல்வர்

வெற்று விளம்பரத்தில் காலம் கழிக்கும் முதல்வர்

திருப்பூர்: ''தமிழக மக்கள் உரிமை மீட்பு' என்ற பெயரில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள பா.ம.க., தலைவர் அன்புமணி, நேற்று முன்தினம் திருப்பூரில் மக்களைச் சந்தித்தார். அரிசி கடைவீதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: மது, கஞ்சா, போதை மருந்து என அனைத்து வகையிலும் மக்களை தி.மு.க., சீரழித்து விட்டது. கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் துவங்கிய சாராய விற்பனை இன்றும் அமோகமாக நடக்கிறது. மூன்று தலைமுறையை போதைக்கு அடிமையாக்கி, தமிழகத்தை சீரழித்து விட்டனர். போதை பொருள் கடத்தலையும் தி.மு.க.,வினர் செய்கின்றனர். தமிழகத்தில், இயற்கை வளம் அழிக்கப்படுகிறது. கனிம வளங்களை வெட்டிக் கடத்தி விற்கின்றனர். ஆறுகள், மலைகள், மரங்கள் என அனைத்தையும் அழித்து விட்டனர். அனைத்திலும், ஆளும்கட்சியினர் அராஜகம் தான் நடக்கிறது. தமிழகம் முழுதும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை; சொத்துகளுக்கு பாதுகாப்பில்லை; ஊருக்குள் அடிப்படை வசதியில்லை; பிழைப்புக்கு வழியில்லை. விவசாயம் அழிந்து விட்டது; தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. இதற்கெல்லாம் காரணமான தி.மு.க., ஆட்சியை, மூட்டை கட்டி வீட்டுக்கு அனுப்ப வேண்டும். கல்வியில் சிறந்த தமிழகம் என வெற்று பெருமை பேசுகின்றனர். அரசு பள்ளிகளில் கட்டடம் இல்லை; கழிப்பறை இல்லை; ஆசிரியர்கள் இல்லை; மாணவர்கள் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டது. தேர்தல் வாக்குறுதியில் எதையும் நிறைவேற்றவில்லை. முழுக்க முழுக்க வெற்று விளம்பரத்திலேயே முதல்வர் ஸ்டாலின் காலம் கழித்துக் கொண்டிருக்கிறார். இட ஒதுக்கீடு குறித்து, உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு, எப்போது விசாரணைக்கு வருகிறதோ, அப்போது, 69 சதவீத இடஒதுக்கீடு முடிவுக்கு வந்து விடும். தி.மு.க., கூட்டணியில் உள்ள வைகோ, செல்வப் பெருந்தகை, ஈஸ்வரன், திருமாவளவன் என யாருமே இது பற்றி கேட்கவில்லை. ஆனால், இவர்கள் தான் சமூக நீதியை காப்பாற்றுவதாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அன்புமணி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !