உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு சாப்பாடு ரூ.1,200; உட்கார சேர் கிடையாது * கட்சி நிர்வாகிகள் செயலால் விஜய் அதிர்ச்சி

ஒரு சாப்பாடு ரூ.1,200; உட்கார சேர் கிடையாது * கட்சி நிர்வாகிகள் செயலால் விஜய் அதிர்ச்சி

சென்னை:தமிழக வெற்றிக் கழக ஆண்டு விழாவில் பங்கேற்றவர்கள் சாப்பிடுவதற்கு, தலைக்கு 1,200 ரூபாய் செலவிட்ட நிலையில், பலரும் சேர் இல்லாமல் நின்று கொண்டே சாப்பிட்டுள்ளனர்.அ.தி.மு.க., செயற்குழு, பொதுக்குழு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில், மற்ற கட்சிகள் வாய் பிளக்கும் வகையில், வரவேற்பு, உணவு உபரிசரிப்பு உள்ளிட்ட பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்படும். ஜெயலலிதா காலத்தில் இருந்தே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அ.தி.மு.க., பிரமாண்டத்தை மிஞ்சும் வகையில், த.வெ.க., இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை நடத்த, அக்கட்சி தலைவர் விஜய் திட்டமிட்டார். இதற்காக, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள சொகுசு விடுதிகளின் வசதிகள் குறித்து, ஒரு மாதத்திற்கு மேலாக ஆராயப்பட்டது. இதற்கென அக்கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், ஒரு குழுவையும் விஜய் நியமித்தார். இக்குழுவினர், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள, 'போர் பாயின்ட் ஷெரட்டன்' தனியார் சொகுசு விடுதியை தேர்வு செய்தனர். அங்குள்ள மண்டபத்தில், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த, பல லட்சம் ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த விடுதியில், கடந்த 26ம் தேதி கட்சி விழா நடந்தது. விஜய் நடிக்கும் திரைப்படங்களின் பாடல் வெளியீட்டு விழா போல, இதற்கும் சினிமா பாணியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அரங்கையும், விழா ஏற்பாடுகளையும் பார்த்து, கட்சி நிர்வாகிகள் அசந்து போயினர். உணவு உபரிசரிப்பும் அதேபோல இருக்கும் என எதிர்பார்த்தனர். மகா சிவராத்திரி என்பதால், அசைவ உணவுகளை தவிர்த்து, சைவ உணவுகள் பறிமாறப்பட்டன. கேரட் அல்வா, பாதாம் பாயாசம், வெஜ் பிரியாணி, பூரி, மசால் வடை உள்ளிட்ட, 25 வகையான மெனுவை, விஜய் பரிந்துரைத்திருந்தார். அதன்படி, 4,500 பேருக்கு உணவுகள் தயாரிக்கப்பட்டன. அனைவரும் அமர்ந்து சாப்பிடும் வகையில் வாழை இலை போட்டு பந்தி பறிமாறவும், விஜய் உத்தரவிட்டு இருந்தார். இதற்காக சொகுசு விடுதி வளாகத்தில், மூன்று உணவு பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மகளிருக்கு தனியாக இடவசதி செய்யப்பட்டு இருந்தது. அரங்கில் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அமர்வதற்கு போதிய சேர்கள் இல்லை. இதனால், புஸ்ஸி ஆனந்த் உத்தரவுப்படி, உணவு பந்தலில் இருந்த சேர்கள், அரங்கிற்கு எடுத்து செல்லப்பட்டன. அரங்கில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, உணவு உபரிசரிப்பு துவங்கியது. வாழை இலையில் உணவுகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், உட்கார்ந்து சாப்பிட நாற்காலிகள் இல்லை. இதனால், பலரும் நின்று கொண்டே சாப்பிட்டனர். 'தலைக்கு 1,200 ரூபாய் தலைவர் விஜய் செலவழித்தும் சேர் இல்லையே' என்ற ஆதங்க செய்தியை, கட்சியினர் பலரும் வீடியோவாக பரப்பி வருகின்றனர். இதனால், விஜய் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் கடும் கோபம் அடைந்த நடிகர் விஜய்,விழா ஏற்பாடுகளில் சொதப்பிய நிர்வாகிகளை அழைத்து கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை