| ADDED : ஜூன் 01, 2025 09:21 PM
சென்னை: பாகிஸ்தானுக்கு எதிரான, ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை, நமது ராணுவத்தின் மீது நம்பிக்கை வெளிப்படுத்திய ஒரு திருப்பு முனை தருணம் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்தார்.'சிந்தூர் நடவடிக்கை' என்ற குறுகியகால மற்றும் விரைவான ராணுவ நடவடிக்கையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற தீர்க்கமான வெற்றியைக் கொண்டாடும் வகையில் சென்னையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்வில், கவர்னர் ரவி கலந்து கொண்டு பேசினார்.கவர்னர் ரவி பேசியதாவது:அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதத்திற்கு எதிராக, சகிப்புத்தன்மையற்ற தனது உறுதியை வெளிப்படுத்தியதோடு, இந்தியா, பாகிஸ்தானை வெளிப்படையாகத் தண்டித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கை, அதன் உள்நாட்டு ராணுவத் திறன்களை வெளிப்படுத்தியது, மேலும் அதன் ஆயுதப் படைகளின் வீரம் மற்றும் நமது தேசியத் தலைமை மற்றும் ஆயுதப் படைகள் மீது ஒவ்வொரு இந்தியரின் கூட்டு நம்பிக்கையையும் வெளிப்படுத்தியது ஒரு திருப்புமுனை தருணம்.பல ஆண்டுகளாக அடக்குமுறைகளிலிருந்து விடுபட்ட போதும், பாகிஸ்தானின் தொடர்ச்சியான தவறான செயல்களுக்கு போதுமான வகையில் எதிர்வினையாற்றாதது மற்றும் முடிவெடுக்க இயலாதது போன்ற நிலைகளுக்கு மாறாக ,பிரதமர் மோடி தலைமையில் நாடு ஒரு தீர்க்கமான மாற்றம் கண்டு, ராணுவ வலிமை மற்றும் ராஜீய செல்வாக்கு உள்ளிட்ட தனது தேசிய வளங்களை தேச நலன்களைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்துவதற்கான தெளிவு, துணிச்சல், உறுதிப்பாடு, அரசியல் விருப்பம் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்டது.இவ்வாறு கவர்னர் ரவி குறிப்பிட்டு பேசினார்.