ஆவின் நெய் பாக்கெட் நிறுத்தம் பண்டிகை நாளில் மக்கள் பாதிப்பு
சென்னை:ஆவினில், 100 கிராம், 200 கிராம் பாக்கெட் நெய் விற்பனை நிறுத்தப்பட்டு உள்ளதால், பண்டிகை நாளான நேற்று, பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். கிருஷ்ண ஜெயந்தி பணடிக்கை கொண்டாட்டம் என்றாலே, வெண்ணெய், நெய்க்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கும். ஆவின் நிறுவனம் தயாரிப்பிலான, நெய் மற்றும் வெண்ணெய்க்கு தேவை அதிகம் இருக்கும். வசதியான குடும்பத்தினர், கிலோ கணக்கில், நெய் மற்றும் வெண்ணெய் வாங்கி பயன்படுத்துவர். நடுத்தர மக்களும், வசதி குறைந்தவர்களும், 100 கிராம் மற்றும் 200 கிராம் அளவுள்ள பாக்கெட்டுகளில் உள்ள நெய், வெண்ணெய் வாங்கி, தங்கள் வீடுகளில் பூஜை, சமையலுக்கு பயன்படுத்துவர். இந்நிலையில், ஆவினில் வினியோகிக்கப்பட்டு வந்த, 100 கிராம், 200 கிராம் பாக்கெட்டு நெய் விற்பனை நிறுத்தப்பட்டு உள்ளதால், பண்டிகை நாளான நேற்று, அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும், 100 கிராம், 200 கிராம் பாக்கெட்டுகளுக்கு பதிலாக, பிளாஸ்டிக் டப்பாக்களில் நெய் விற்கப்படுகிறது. அதன் விலை கூடுதலாக உள்ளது. 100 கிராம் பாக்கெட் நெய், 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், 100 கிராம் டப்பா நெய், 85 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், தனியார் நிறுவன நெய் வாங்கும் நிலை, பொது மக்களுக்கு ஏற்பட்டது. இதேபோல், ஆவின் வெண்ணெய்க்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. சப்ளை குறைவாக இருப்பதாக, ஆவின் விற்பனையகங்களில் காரணம் கூறப்படுகிறது.