வெண்ணெய் கெட்டுப்போன விவகாரம் மதுரையில் ஆவின் ஜே.எம்.டி., விசாரணை
மதுரை: மதுரை ஆவினுக்கு கொண்டுவரப்பட்ட ரூ. 4 கோடி மதிப்பிலான வெண்ணைய் கெட்டுப்போன விவகாரம் தொடர்பாக ஆவின் இணை மேலாண்மை இயக்குநர் (ஜே,எம்,டி.,) கவிதா தலைமையிலான குழு மதுரையில் விசாரணை நடத்தியது. உ.பி.,யில் உள்ள கிர்பா ராம் டெய்ரி பிரைவேட் லிமிடெட் (லிலாதர் அண்ட் டெய்லி ஹெல்த்) என்ற தனியார் நிறுவனத்திடமிருந்து கடந்த மாதம் மூன்று கட்டங்களாக 81 டன் வெண்ணெய் மதுரை ஆவினுக்கு கொண்டுவரப்பட்டது. இதன் மதிப்பு ரூ.4 கோடிக்கும் மேல். இந்த வெண்ணெய் மதுரை ஆவின் கோல்டு ஸ்டோரேஜில் வைக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் அந்த வெண்ணெயிலிருந்து துர்நாற்றம் வீசியதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தனியார் நிறுவனம் வெண்ணெயை கொண்டுவரும்போது இறக்கி வைக்கும் முன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதா. தரமில்லையென்றால் அப்போதே திருப்பி அனுப்பி வைக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. கெட்டுப்போனதை சம்பந்தப்பட்ட நிறுவனம் திரும்ப பெற்றுக்கொள்ளாவிட்டால் நஷ்டத்தை யார் ஏற்பது போன்ற நெருக்கடி ஆவின் அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. இந்த விவகாரம் நிர்வாக ரீதியான குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இவ்விஷயத்தில் என்ன நடந்தது என்பது குறித்து ஆவின் மேலாண்மை இயக்குநர் ஜான் லுாயிஸ் உத்தரவின்பேரில், ஜே.எம்.டி., கவிதா, சென்னை ஆவின் தரக்கட்டுப்பாடு அலுவலர்களுடன் மதுரையில் விசாரணை நடத்தினார். அப்போது மதுரை ஆவின் தரக்கட்டுப்பாடு, பண்ணைப் பிரிவு அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் மூன்றரை மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. கவிதா கூறுகையில் விசாரணையில் வெண்ணெய் முழுவதும் கெட்டுப் போகவில்லை என தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட வேதிப்பொருள் அதிகமாக இருந்தது. ஆனாலும் அதை பயன்படுத்த முடியாது என்பதால் சம்பந்தப்பட்ட உ.பி., தனியார் நிறுவனம் அதை திரும்ப பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.