விதி மீறும் சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
சென்னை:'விதிகளை மீறும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புழல் சிறையில் உள்ள விசாரணை கைதிகளை சந்திப்பதற்கு, ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்; ஒரு நேரத்தில் ஒரு கைதியை மட்டுமே சந்திக்க அனுமதி அளிக்கப்படும். கைதிகளுடன், 'இன்டர்காம்' வழியாக மட்டுமே பேச அனுமதிக்கப்படும் என்பன உள்ளிட்ட புதிய நடைமுறைகளை, சிறை நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆனந்த்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளாட் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 'இன்டர்காம் வாயிலாக பேசினால், அது பதிவாகும் என்ற பயம், கைதிகளுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால், நேரடியாக பேச ஏற்பாடு செய்யலாம். 'புழல் சிறையில் கைதிகளை சந்திக்க வரும் வழக்கறிஞர்களுக்கு, அடிப்படை வசதிகள் அளிக்கும்படி பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்பட்டதா' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.இதையடுத்து வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர்கள் காசிராஜன், வழக்கறிஞர்கள் சங்க செயலர் கிருஷ்ணகுமார் ஆஜராகி, ''புழல் சிறையில் இன்டர்காம் வசதி இன்னும் அமலில் உள்ளது. அதனால், கைதிகளை சந்தித்து பேசுவதில் சிரமம் உள்ளது,'' என்றனர்.அப்போது நீதிபதிகள், 'கைதிகள் தங்களின் குறைகளை, வழக்கறிஞர்கள் வாயிலாகவே தெரியப்படுத்தும் நிலையில், இருவருக்கும் இடையேயான பேச்சு ரகசியமாக இருக்க வேண்டியது முக்கியம். சிறை விதிகளை மீறும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். மேலும், கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து, மனுத்தாக்கல் செய்யவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விசாரணையை, வரும் 29க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.