உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முறைகேடு புகார் கால்நடை மருத்துவ கல்லுாரி முதல்வர் மீது நடவடிக்கை

முறைகேடு புகார் கால்நடை மருத்துவ கல்லுாரி முதல்வர் மீது நடவடிக்கை

சென்னை:ரூபாய் 5 கோடி முறைகேடு புகாரில், சென்னை கால்நடை மருத்துவக் கல்லுாரி முதல்வர் சவுந்தரராஜன், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ளது, சென்னை கால்நடை மருத்துவக் கல்லுாரி. இதன் முதல்வராக சவுந்தரராஜன் இருந்தார். இவர் இப்பதவிக்கு வரும் முன், மாதவரத்தில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், கால்நடை நல கல்வி மைய இயக்குநராக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போது, கால்நடை மருத்துவ காப்பீட்டு அறக்கட்டளை திட்டத்தில், 5 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், ஓராண்டுக்கு முன் சவுந்தரராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, சென்னை கால்நடை மருத்துவக் கல்லுாரி முதல்வராக இருந்த சவுந்தரராஜன், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார். அவருடன் சேர்த்து, ஐந்து அதிகாரிகள் மீதும் புகார் எழுந்ததால், அவர்கள் மற்ற துறைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு எந்த காலகட்டத்தில், எப்படி நடந்தது என விசாரிக்க, சென்னை கால்நடை மருத்துவக் கல்லுாரி பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள சதீஷ்குமார் தலைமையில், மூன்று பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, 15 நாட் களுக்குள் விசாரணை அறிக்கையை, கால்நடைத்துறை செயலரிடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, கால்நடை மருத்துவ பல்கலை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 2021 முதல் 24 வரை, பல்கலையின் கால்நடை நல கல்வி மைய இயக்குநராக சவுந்தரராஜன் பணியாற்றினார். அக்காலத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில், சென்னை கால்நடை மருத்துவக்கல்லுாரி முதல்வர் பொறுப்பில் இருந்து சவுந்தரராஜன் விடுவிக்கப்பட்டு உள்ளார். யாரும், 'சஸ்பெண்ட்' செய்யப்படவில்லை. அவர் கல்லுாரி பேராசிரியராக தொடர்கிறார். விசாரணை அறிக்கைக்கு பின், சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை என்பது தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை