கார் நிறுத்திய விவகாரத்தில் சண்டை நீதிபதி மகனை தாக்கிய நடிகர் கைது
சென்னை:கார் நிறுத்தியவிவகாரத்தில் ஏற்பட்ட சண்டையில், நீதிபதியின் மகன், அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் மாமியாரை தாக்கிய நடிகர் தர்ஷனும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர்.தனியார், 'டிவி' ஒன்றில் ஒளிபரப்பான, 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் தர்ஷன், 35. இவர், கூகுள் குட்டப்பா, நாடு என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது,'சரண்டர்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.இவர், சென்னை முகப்பேர் கிழக்கு, பாரி சாலையில் நண்பர் லோகேஷ், 31, வீட்டில் தங்கி உள்ளார். லோகேஷ் வீட்டருகே, 'டீ பாய்' என்ற கடைஉள்ளது.இக்கடைக்கு, சென்னை உயர் நீதிமன்ற பெண்நீதிபதியின் மகன் ஆதிசூடி, 35, தன் கர்ப்பிணி மனைவி லாவண்யா, 31, மாமியார் மகேஸ்வரி, 55, ஆகியோருடன், நேற்று முன்தினம் மாலை, 5:30 மணியளவில் சென்றுஉள்ளார்.அப்போது, ஆதிசூடி தன் காரை, தர்ஷனின் நண்பர் லோகேஷின் வீட்டு வாசலில் நிறுத்தி உள்ளார்.அங்கு வந்த லோகேஷ், 'என் காரை வீட்டு வளாகத்திற்குள் நிறுத்த வேண்டும். நீங்கள் உங்கள் காரை எடுத்து விடுங்கள்' எனக் கூறியுள்ளார். அந்த இடத்தில் தர்ஷனும்இருந்துள்ளார்.இந்த விவகாரத்தில், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின், கைகலப்பு வரை சென்றுள்ளது. அப்போது, தர்ஷன், லோகேஷ் ஆகியோர், ஆதிசூடியை கடுமையாக தாக்கி உள்ளனர். லாவண்யா தன் கையில் இருந்த டீயை, அவர்கள் மீது ஊற்றி உள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த லோகேஷ், தர்ஷன் ஆகியோர் லாவண்யாவின் கையை பிடித்து முறுக்கி தாக்கியதாகவும், தடுக்க வந்த மகேஸ்வரியைஅடித்ததாகவும் கூறப்படுகிறது.இதனால் காயமடைந்த இருவரும், அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தர்ஷன் மற்றும் லோகேஷ் ஆகியோரும், தனியார் மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்றுள்ளனர்.சம்பவம் குறித்து இரு தரப்பினரும், ஜெ.ஜெ., நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்தில் உள்ள, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வுசெய்த போலீசார், தர்ஷன் மற்றும் லோகேஷ் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.இவர்களால் தாக்கப்பட்ட மகேஸ்வரிக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதால், தீவிர சிகிச்சையில் உள்ளார்.