வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அமெரிக்காவில் ஊழல் செய்து மாட்டிக்கிட்ட பணத்தை , மக்களிடம் இருந்துதான் வசூலிக்கணும் என்று அதானி முடிவு செய்துவிட்டார்.
இல்ல நீங்க இங்க ஊழல் செஞ்ச பணத்தை வெளியே கொண்டு போக அதானி ஒத்துக்கலை
சென்னை: தமிழகத்தில் வீடுகளில், ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும், 'ஸ்மார்ட் மீட்டர்' திட்ட பணிக்கான, 'டெண்டர்' ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு, டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்களில், 'எல் 1' எனப்படும் குறைந்த விலை புள்ளி வழங்கியதாக தேர்வான அதானி நிறுவனம், மின்வாரியம் நிர்ணயித்திருந்த விலையை விட அதிகமாக குறிப்பிட்டிருந்ததும், அதை குறைக்க மறுத்ததுமே காரணம் என்று கூறப்படுகிறது. தமிழக மின் வாரிய ஊழியர்கள், வீடுகளுக்கு இரு மாதங்களுக்கு ஒரு முறை நேரில் சென்று, மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கின்றனர். ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும், 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தை செயல்படுத்த, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய மின் துறை உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் மறுசீரமைப்பு மின் வினியோக திட்டத்தின் கீழ் தமிழகத்தில், 19,000 கோடி ரூபாயில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை செயல்படுத்த, மின் வாரியம் முடிவு செய்தது.அதன்படி, 3.03 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தி, அதை பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, 2023 ஆகஸ்டில், 'டெண்டர்' கோரப்பட்டது. 10 ஆண்டு பராமரிப்பு
டெண்டரில் தேர்வாகும் நிறுவனம் மீட்டர் பொருத்துவது, தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்துவது, அவற்றை ஒருங்கிணைப்பது, பராமரிப்பு என, அனைத்து பணிகளையும், 10 ஆண்டுகளுக்கு மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொகுப்பிலும், 82 லட்சம், 69 லட்சம், 85 லட்சம், 67 லட்சம் என, நான்கு தொகுப்புகளாக ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்கப்பட இருந்தன. டெண்டரில் அதானி உட்பட நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன.அவற்றின் தொழில்நுட்ப மற்றும் விலை புள்ளி திறக்கப்பட்டதில், அதானி நிறுவனம், 'எல் 1' எனப்படும் குறைந்த விலை புள்ளி வழங்கிய நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டது. ஆனாலும் அது, மின் வாரியம் நிர்ணயித்திருந்த விலையை விட அதிகமாக இருந்தது.இந்த விபரத்தை மின் வாரியம், தமிழக அரசுக்கு தெரிவித்தது. இதையடுத்து அதிகாரிகள், அதானி அதிகாரிகளுடன், விலை குறைப்பு பேச்சு நடத்தினர். மூன்று முறை பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, ஓராண்டாக முடிவு எட்டப்படாமல் இருந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்கான டெண்டரை ரத்து செய்து, மின் வாரியம் தற்போது உத்தரவிட்டுள்ளது. புதிதாக டெண்டர்
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:டெண்டரில் தேர்வாகும் நிறுவனம் ஸ்மார்ட் மீட்டரை பொருத்துவதுடன், 10 ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும். நான்கு நிறுவனங்களில் குறைந்த விலை புள்ளி வழங்கியதாக தேர்வான நிறுவனம், மும்முனை பிரிவில் மீட்டர் பராமரிப்பு கட்டணமாக, 169 ரூபாயும், ஒரு முனை மீட்டருக்கு, 120 ரூபாயும் விலைப்புள்ளி வழங்கியது. அதே நிறுவனம் புதுச்சேரியில் அந்த பணிக்கு, மும்முனை பிரிவில், 120 ரூபாயும், ஒரு முனை மீட்டருக்கு, 70 ரூபாயும் விலை வழங்கியுள்ளது. அந்நிறுவனத்துடன் விலை குறைப்பு பேச்சு நடத்திய போது மும்முனை மீட்டருக்கு, 139 ரூபாய்க்கும், ஒரு முனை மீட்டருக்கு, 96 ரூபாய்க்கும் வந்தது. அதற்கு மேல் விலையை குறைக்கவில்லை. எனவே, அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டருக்கு அதிக விலை புள்ளி வழங்கியதால், அத்திட்டத்திற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவில் புதிய டெண்டர் கோரப்பட்டு, ஆறு மாதங்களில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவில் ஊழல் செய்து மாட்டிக்கிட்ட பணத்தை , மக்களிடம் இருந்துதான் வசூலிக்கணும் என்று அதானி முடிவு செய்துவிட்டார்.
இல்ல நீங்க இங்க ஊழல் செஞ்ச பணத்தை வெளியே கொண்டு போக அதானி ஒத்துக்கலை