''படுத்த படுக்கையா இருக்கிறவங்களை எல்லாம், தேர்தல் பணிக்குழுவுல போட்டிருக்காவ வே...'' என்றபடியே வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.''காங்., விவகாரமா பா...'' என, கற்பூரமாக கேட்டார், அன்வர்பாய்.''ஆமா... தமிழக, காங்., தலைவர் அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், குமரி அனந்தன், மணிசங்கர் அய்யர், கிருஷ்ணசாமி, இளங்கோவன் உட்பட, 31 பேரை தேர்தல் பணி குழு உறுப்பினர்களா அறிவிச்சிருக்காங்கல்லா...''இதுல சிலர், உடல்நலம் குன்றி படுத்த படுக்கையா இருக்காவ... இன்னும் சிலர், சத்தியமூர்த்தி பவன் பக்கம் எட்டி கூட பார்க்காதவ வே...''இந்த பட்டியல்ல இருக்கிற பலருக்கும் சீட் கிடைக்காட்டி, அவங்க தேர்தல் பணியில ஈடுபட மாட்டாவளாம்... இதனால, பட்டியலை பார்த்துட்டு, தமிழக காங்கிரஸ்ல பலரும் அதிருப்தியில இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.''தேர்தல் முடியறதுக்குள்ள தமிழக காங்கிரஸ்ல, இன்னும் என்னென்ன, 'காமெடி' எல்லாம் நடக்குமோ...'' என சிரித்த குப்பண்ணாவே, ''முறைகேடு நடந்தா, யார் பொறுப்புன்னு புலம்பறா ஓய்...'' என்றார்.''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''கோவையில இருக்கற ஒரு பல்கலையின் முக்கிய பதவியில, 60 வயதை கடந்து, 'ரிட்டையர்' ஆன ஒருத்தர், சிறப்பு பணியில இருக்கார்... சிறப்பு பணிக்காலத்துல இருக்கறவாளை, முக்கிய பதவியில அமர்த்தக் கூடாதுங்கறது விதி...''பல்கலையில பல சீனியர் பேராசிரியர்கள் இருந்தாலும், இவரை தான் முக்கிய பதவிக்கு பொறுப்பா போட்டிருக்கா ஓய்... இவருக்கு, 'வசூல் ராஜா'ன்னு பட்ட பெயரே இருக்கு...''வசூல் பண்ணி மேலிடத்துக்கு முறையா கப்பம் கட்டிடுவாருங்கறதாலயே, இவரை சிறப்பு பணியில முக்கிய பொறுப்புல நியமிச்சிருக்கா ஓய்...''ரிட்டையர் ஆன இவரது கையெழுத்துக்கு எந்த மதிப்பும் கிடையாது... ஆனாலும், பல முக்கியமான பைல்கள்ல இஷ்டத்துக்கு கையெழுத்துகளை போட்டு தள்ளிண்டே இருக்கார்... 'இதுல ஏதாவது முறைகேடுகள் நடந்தா யார் பொறுப்பேத்துக்கறது'ன்னு பல்கலை ஊழியர்கள் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''முருகவேல், சூடா ஒரு டீ சாப்பிடுங்க...'' என, நண்பரை உபசரித்த அன்வர்பாயே, ''சீட் குடுத்தாலும் வேணாம்னு நழுவ பார்க்கிறாரு பா...'' என்றார்.''எந்த கட்சியிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''லோக்சபா தேர்தலுக்காக, அ.தி.மு.க.,வுல, 39 தொகுதிக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்ற பணிகள் நடந்துட்டு இருக்கு... ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில முன்னாள் எம்.பி., சிட்லபாக்கம் ராஜேந்திரனை நிறுத்த, கட்சி மேலிடம் விரும்புது பா...''அந்த தொகுதிக்கு, வசதி இல்லாத பலரும் சீட் கேட்டாலும், ராஜேந்திரன், பண பலம், ஆட்கள் பலம் உள்ளவருங்கிறதால, அவருக்கு சீட் தர நினைக்கிறாங்க...''அந்த தொகுதியில, தி.மு.க.,வின், 'சிட்டிங்' எம்.பி.,யான, டி.ஆர்.பாலு அல்லது காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவரான படப்பை மனோகரன் ஆகிய இருவர்ல ஒருத்தர் தான் வேட்பாளரா இருப்பாங்களாம்...''இவங்க ரெண்டு பேருமே, பண பலம் படைச்சவங்க என்பதால, தனக்கு சீட் வேண்டாம்னு ராஜேந்திரன் நழுவ பார்க்கிறாரு பா...'' என முடித்தார், அன்வர்பாய்.