திருநெல்வேலி,: ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் வக்கீல் ஒருவர் கடந்த மாதம் வெட்டப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன், நெல்லையில் நேற்று நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், 'பாதுகாப்பு விஷயத்தில் போலீஸ் என்ன செய்கிறது?' என, சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்த, அதே ஊரைச் சேர்ந்த கண்ணன், 30 என்பவர், வக்கீல் குமாஸ்தாவான ஆனந்தகுமாரால், 39, நவம்பர், 20ல் பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்திலேயே அரிவாளால் வெட்டப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு, புதுச்சேரி பார் அசோஷியேஷன் சார்பில், இரு நாட்கள் போராட்டம் நடைபெற்றது. இச்சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், நெல்லையில் நேற்று நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து, பாதுகாப்பில் கோட்டை விட்ட போலீசாரை கண்டித்துள்ளது. கொலை விபரம்
திருநெல்வேலி அடுத்த கீழநத்தத்தை சேர்ந்தவர் ராஜாமணி, 32; ஊராட்சி வார்டு உறுப்பினரான இவர் தி.மு.க., அனுதாபி. பெட்டிக்கடை நடத்தி வந்தார். 2023 ஆக., 13ல் கீழநத்தத்தில் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த மாயாண்டி, 22, இசக்கி, 25, ஆகியோர் குடிபோதையில் ராஜாமணியை வெட்டிக் கொன்றனர். கொலை செய்தவர்கள் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அப்பாவியான ராஜாமணி கொலை செய்யப்பட்டதால், இரு ஜாதிகள் இடையிலான மோதலாக மாறியது. கொலை வழக்கில் கைதான மாயாண்டி, இசக்கி ஆகியோர் மீது 2023 செப்., 19ல் குண்டர் சட்டம் பாய்ந்தது. ஓராண்டு சிறை தண்டனைக்கு பின் இருவரும் சமீபத்தில் வந்தனர். ராஜாமணியின் தம்பி மனோராஜ், 25. அண்ணன் கொலைக்கு பிறகு முடியை சவரம் செய்யாமல், 'அண்ணனை கொன்றவர்களை பழி வாங்குவேன்' என்று கூறி வந்துள்ளார்.
பழைய கார்
அதனால், மாயாண்டி, இசக்கி ஆகியோர் சொந்த ஊரில் இல்லாமல் வெளியூர் சென்றனர். இருப்பினும், வேறு வழக்குகளில் திருநெல்வேலி நீதிமன்றத்தில், மாயாண்டி ஆஜராகி வந்தார்.அவர் நேற்று ஒரு வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராக வருவதை மனோராஜ் தரப்பினர் அறிந்தனர். வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய, கேரள பதிவெண் உடைய பழைய காரில் நீதிமன்றம் முன் தயாராக காத்திருந்தனர். நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள ஹோட்டலில் டீ குடிக்க, மாயாண்டி வந்தார். அப்போது, அவர் மனோராஜை பார்த்து விட்டார். அங்கிருப்பது சரியல்ல என்று, வேகமாக கிளம்பினார்.உடன் அவரை, மனோராஜ் தரப்பினர் அரிவாள்களுடன் பின் தொடர்ந்தனர். நீதிமன்ற பிரதான வாசலுக்கு செல்லும் முன், ரோட்டோரமாக மாயாண்டியை காலில் தடுக்கி கீழே விழச் செய்தனர். கீழே விழுந்தவரின் கால்களில் முதலில் வெட்டினர். ஒரு கையை துண்டாக வெட்டினர். பின், கழுத்தில் சரமாரியாக வெட்டினர். இதில், சம்பவ இடத்திலேயே மாயாண்டி இறந்தார். திருநெல்வேலி -- -துாத்துக்குடி சாலையில், மாவட்ட நீதிமன்றம் முன் காலை நேரம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். காலை, 10:00 மணிக்கு நீதிமன்ற நேரத்தில் நடந்த இந்த பயங்கர கொலை சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கொலை செய்ததும் மனோராஜ், அவருடன் இருந்த சிவா, தங்க மகேஷ் ஆகியோர் காரில் கிளம்பி, திருநெல்வேலி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் ஆயுதங்களுடன் சரணடைந்தனர். சம்பவத்தின் போது, மாயாண்டியை கீழே விழச் செய்தவரான ராமகிருஷ்ணன் என்பவர், காரில் ஏற முடியாமல் போனதால், நீதிமன்றத்திற்கு எதிர் தெருவில் ஓடி தப்பிக்க முயன்றார். அவரை சிலர் துரத்தி சென்று பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். உடன், கொலை நடந்த இடத்தில் போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். நீதிமன்ற பகுதியில் போலீசார் முறையாக பாதுகாப்பு அளிக்கவில்லை எனக்கூறி, வழக்கறிஞர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாயாண்டியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேநேரத்தில், கொலையில் தொடர்புடைய முத்துகிருஷ்ணன் மாலையில் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, நீதிமன்ற வாசலில் நடந்த இந்த கொலை சம்பவம் குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. போலீஸ் தரப்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆகியோர் ஆஜராகினர். அவர்களிடம், 'மாவட்ட அளவில் உள்ள நீதிமன்றங்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, ஏற்கனவே உத்தரவிட்டிருந்தோம். நீதிமன்ற வளாகத்தில் உதவி ஆணையர், இன்ஸ்பெக்டர் என, 25 போலீசார் இருந்தும் கொலை நடந்துள்ளது. அதை ஏன் தடுக்கவில்லை?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அதற்கு, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, ''கொலை செய்யப்பட்டவருக்கு எதிராக பல வழக்குகள் உள்ளன; முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளது. நீதிமன்ற வளாகத்தில் இருந்து, 100 மீட்டர் துாரத்தில் சம்பவம் நடந்துள்ளது. நீதிமன்ற வளாகத்துக்குள் நடக்கவில்லை. ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்களை விரைவில் பிடித்து விடுவர்,'' என்றார்.நீதிபதிகள் கூறியதாவது:அந்த ஒருவரையும், வழக்கறிஞர்கள் தான் பிடித்துக் கொடுத்ததாக கூறுகின்றனர். குற்றவாளிகளை, போலீசார் தேடி பிடிப்பது பற்றி நாங்கள் எதுவும் கூறவில்லை. குற்றம் நடப்பதற்கு முன், அதை ஏன் தடுக்கவில்லை என்று தான் கேட்கிறோம்.துப்பாக்கியை பயன்படுத்தி இருந்தால், கொலையை தடுத்திருக்கலாம். நீதிமன்றம் முன் நிற்கும் போலீசார், துப்பாக்கி வைத்திருக்கவில்லையா? உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் தான் போலீஸ் பாதுகாப்பு உள்ளது. அசம்பாவிதம் ஏதும் நடந்தால், அதை போலீசார் தடுப்பரா அல்லது அசம்பாவிதம் நடந்து முடிந்த பின் குற்றவாளிகளை தேடி கண்டுபிடிப்பரா?இவ்வாறு நீதிபதிகள் கேட்டனர்.அப்போது, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, ''ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி காரில் சென்ற போது, இதுபோன்ற சம்பவம் நடந்தது. அப்போது, பாதுகாப்பு போலீஸ் படுகாயமடைந்தார். திருநெல்வேலியில் நடந்த சம்பவம் குறித்து, விரிவான அறிக்கை அளிக்கிறோம்,'' என்றார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், ''மாவட்ட நீதிமன்றங்களில் ஏற்கனவே போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்,'' என்றார்.தொடர்ந்து, 'பொது மக்களின் பார்வையில் படும் வகையில், நீதிமன்ற வளாகம் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு இருக்க வேண்டும். நீதிமன்றம் முன் நடந்த இந்த சம்பவத்தினால், வழக்கறிஞர்கள் அச்சம் அடைந்துள்ளனர். துப்பாக்கியை போலீசார் பயன்படுத்தி, கொலையாளிகளின் காலில் சுட்டு பிடித்திருக்கலாம்; அல்லது அவர்கள் தப்பி செல்லும் காரின் டயரில் சுட்டு பஞ்சர் ஆக்கியும் பிடித்திருக்கலாம். சீருடை அணிந்து பணியாற்றும் போலீசார், சாதாரணமாக இருந்து விட முடியாது' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.பின், இந்த கொலை சம்பவம் தொடர்பாகவும், மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள பாதுகாப்பு பணிகள் குறித்தும், அறிக்கை தாக்கல் செய்யும்படி, அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். நடந்த சம்பவம் குறித்து, திருநெல்வேலியில் உள்ள வழக்கறிஞர்களிடம் விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, பார் கவுன்சில் வழக்கறிஞர் சந்திரசேகருக்கும், நீதிபதிகள் அறிவுறுத்தினர்.வழக்கு விசாரணை, இன்றும் தொடர்கிறது.
கொலை
நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவியை சேர்ந்த செல்லத்துரை மகன் மணிகண்டன், 22; சென்னையில் தனியார் சட்டக்கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு மாணவர். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். நேற்று காலை, கமிட்டி நடுநிலைப் பள்ளி அருகே மாயாண்டி, 46, என்பவர் உட்பட ஒரு கும்பலால் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார். அம்பாசமுத்திரம் அருகே கோடாரங்குளத்தில் சிவராமன், 25 என்பவர் கடந்த ஆண்டு கொலையானார். இச்சம்பவத்தில் மணிகண்டனின் உறவினர் கைதானார். அதனால் பழி வாங்கலுக்காக மணிகண்டன் கொல்லப்பட்டுள்ளார்.
குண்டர் சட்டம் துாள் துாள்
திருநெல்வேலி மாவட்டத்தில் பழிக்குப்பழி கொலைகளும், கொலையாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவதும் நடக்கிறது. ஆனால், அவர்கள் தொடர்ந்து சிறையில் இருக்கின்றனரா என்பது கேள்விக்குறி. மே, 4ல் சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் ஒரு கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டார்.மேலப்பாளையத்தில் நிலம் பத்திரப்பதிவு முறைகேடு தொடர்பாக, முல்லான் என்பவர் மீது இவர் புகார் செய்தார். அதில் ஏற்பட்ட முன்விரோதத்தில், அவர் மீது கொலை முயற்சி நடந்தது. முல்லான் மீது பல வழக்குகள் உள்ளன. பெர்டின் ராயன் மீதான கொலை முயற்சி வழக்கில் முல்லான் உட்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், சில நாட்களிலேயே ஜாமினில் வந்தனர்.அதேபோல, வாகைகுளத்தை சேர்ந்த பட்டியலின வாலிபர் தீபக் ராஜா; மே மாதம் திருநெல்வேலி நீதிமன்றம் அருகே சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். ஜாதி ரீதியாக நடந்த இந்த கொலையில் ஏழு பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களும் அண்மையில் விடுவிக்கப்பட்டனர்.இத்தகைய கொலைகளில் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தாலும், முறையாக ஆவணங்கள் தாக்கல் செய்வதில்லை. வழக்கை திறம்பட நடத்துவதில்லை என்ற புகார் உள்ளது.