அரசின் திட்டங்களை கண்காணிக்க ஏ.ஐ. தொழில்நுட்பம் உதவுகிறது
கோவை : ''தமிழக அரசின் செயல்பாடுகளில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை இணைத்து வருகிறோம்,'' என, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன் பேசினார். கோவை, கொடிசியா வளாகத்தில் நடந்த உலக புத்தொழில் மாநாட்டின் 2ம் நாளான நேற்று, அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது: தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, செயற்கை நுண்ணறிவு திட்டத்தை (ஏ.ஐ., மிஷன்) 18 மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. அதில், அரசு செயல்பாடுகளில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தைப் புகுத்துவது முக்கியமானது. உலகம் முழுதும் நிர்வாகம் மற்றும் ஆட்சியில் பல சவால்கள் உள்ளன. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற, அரசுகள் சிரமத்தை எதிர்கொள்கின்றன. அரசின் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, ஆட்சித்திறனை மேம்படுத்துவது முக்கியம். மிகப்பெரிய தரவுகளை வைத்திருப்பது அரசு. பல்வேறு துறைகளின் கீழுள்ள தரவுகளை ஒருங்கிணைத்து, குடிமக்கள் மற்றும் அரசை இணைப்பது ஏ.ஐ., மிஷனின் இலக்கு. அரசின் பல்வேறு துறைசார்ந்த தரவுகளை, தனியுரிமைபாதிக்காத வகையில், அதேசமயம், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் திறந்த தரவுத் தளமாக மாற்றும் பணி நடக்கிறது.இவ்வகையில், 55 அரசுத் துறைகளின் தரவுகளை ஒருங்கிணைந்து, ஏ.ஐ., திறனாய்வு மையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அரசின் திட்டங்களை கண்காணிக்க ஏ.ஐ., தொழில்நுட்பம் உதவுகிறது. சுகாதாரம், கல்வி, சாலை பாதுகாப்பு, வேளாண்மை உள்ளிட்ட முக்கிய துறைகளின் தரவுகளை ஒருங்கிணைந்து, பிழைதிருத்தங்கள் செய்துள்ளோம்.இத்தரவுத்தொகுப்புகளை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்பயன்படுத்தி, புதிய தீர்வுகளை உருவாக்க முடியும். கல்வித் துறையில் 6ம் வகுப்பு முதல், செயற்கை நுண்ணறிவு காலத்துக்கேற்ற பாடங்கள் சீரமைக்கப்படுகின்றன. ஐ.சி.டி., அகாடமி வாயிலாக, கல்லுாரி மாணவர்கள், பட்டதாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மருத்துவத் துறையின் தரவுகளைப் பயன்படுத்தி, இ--பார்வை, கோஹா, கல்வித் துறையில் வகுப்பறை, இ-பேராசிரியர் போன்ற தொழில்நுட்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அரசின் பல்வேறு துறைகளில் இருந்து 18 கோடி பதிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, அதில் 4 கோடி தனி நபர்களின் தரவுகள் சீர்செய்யப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் சேவை
அடுத்தகட்டமாக, வாட்ஸ்அப் அடிப்படையிலான அரசு சேவைகள் வழங்கப்பட உள்ளன. தமிழக அரசின் 530 நலத்திட்டங்களில் 370 திட்ட பயனாளிகளின் தரவுகள் ஒருங்கிணைப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, ஒரு குடும்பம் சராசரியாக 23 அரசுத் திட்டங்களின் கீழ் பயன் பெறுகிறது. 2.3 கோடி குடும்பங்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
'கற்றுக்கொண்டு துவங்குவது நல்லது'
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு 'யுனிபைட் பேமென்ட்ஸ் இன்டர்பேஸ்' (யு.பி.ஐ.,) செயலி மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனம் 'இப்போ பே'. இதன் நிறுவனர் மோகன் குமார் பேசியதாவது: நகரத்தில் இருக்கும் செயல்பாடுகளை போல், கிராமத்திலும் கொண்டு வர வேண்டும் என முடிவு செய்ததன் விளைவே, 'இப்போ பே'. நவீன தொழில்நுட்ப பரிமாற்றங்களை கிராம மக்களும் பயன்பெறும் வகையில் வடிவமைத்தோம். எல்லோருக்கும் தொழில் முனைவோராக கூடிய தகுதி இருக்கிறது. இடையே தோற்று விட்டால் என்ன செய்வதென பலருக்கு யோசனை வரும். அதற்கு துவங்காமலேயே இருப்பது நல்லது. ஒரு துறையில் ஈடுபடும்போது, அதுகுறித்த தகவல்களை சேகரிப்பது சிறந்தது. அது, ஸ்டார்ட் அப்புக்கும் பொருந்தும். நிறைய விஷயங்களை தேடித் தேடி கண்டறிந்து, ஸ்டார்ட் அப் துவங்க வேண்டும். நான் ஏழு முறை தோற்று, எட்டாவது முறை ஜெயிக்க முடிந்தது. தோல்வியை கண்டு ஒருபோதும் துவளக் கூடாது. இவ்வாறு, அவர் பேசினார்.
'சரியான விஷயத்தை சரியாக சொன்னால் பாதி வெற்றி'
உலக புத்தொழில் மாநாட்டில் பங்கேற்ற, சினிமா இயக்குனர் விக்னேஷ் சிவன் பேசியதாவது: ஒரு பிரச்னைக்கு என்ன தீர்வு என்பதை கண்டறிய வேண்டும். சில நாட்களுக்கு முன் ஒரு கண்டுபிடிப்பை கண்டறிய முடிந்தது. ஒரு ஸ்டார்ட் அப் சிறப்பாக கொண்டு வருவதற்கு, மன உறுதி மற்றும் விருப்பம் முதன்மையாக இருக்க வேண்டும். சரியான விஷயத்தை, சரியாக சொன்னால் பாதி வெற்றியடைந்து விடுவோம். 100 சதவீதம் பங்களிப்போடு ஒரு பணியை செய்வோம். அதையும் மீறி, சரிப்பட்டு வரவில்லை என்றால், சோர்ந்து விடாமல், அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, மறுபடியும் முயற்சிக்க வேண்டும். என்னுடைய அடுத்த படமான, 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'யும், 2040யை மையப்படுத்தியதே. இவ்வாறு, அவர் கூறினார்.
'உலகம் வேகமாக மாறி வருகிறது'
மைக்ரோசாப்ட் இயக்குனர் சிசில் சுந்தர் பேசியதாவது:இன்று உலகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஐபோன், வாட்ஸ் அப் உட்பட எல்லாவற்றிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம். இதுபோன்ற தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ளும்போது, அடுத்த கட்டத்தை அடைய முடியும். மனிதனுக்கு தேவையான வாழ்வாதாரம், நிறுவனங்களுக்குத் தேவையான உற்பத்தி திறன் மற்றும் விரைவான உற்பத்தியை பெறுவது, அதன் வாயிலாக பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுவது போன்ற நடவடிக்கைகளுக்கு போதிய தீர்வு ஏற்படுத்தும் வழியாக, ஏ.ஐ., மாற்றம் கொண்டு வந்திருக்கிறது. பல்வேறு துறைகளில் ஏ.ஐ., பயன்பாடு அதிகரித்து வருகிறது. இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்து, தொழிலில் ஈடுபடுத்தினால் வளர்ச்சி இருக்கும். நவீன தொழில்நுட்பத்தில் ஈடுபடும் தொழில்முனைவோருக்கு பெரிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஏ.ஐ., உட்பட தொழில்நுட்பங்களில் தொழில்முனைவோர் உருவாகி வருகின்றனர். புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி களமிறங்கும் போது, திறமையான படைப்பை உருவாக்க வேண்டும். நல்ல தீர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
மாணவர்களின் 'ஸ்டார்ட் அப்' ஆர்வம்; உதவியது தொழில்நுட்ப மைய அரங்கு
உலக புத்தொழில் மாநாட்டுக்கு பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் ஏராளமானோர் அழைத்து வரப்பட்டனர். அரங்குகளில் அமைக்கப்பட்டிருந்த ஸ்டார்ட் அப் குறித்த தகவல்களை அறிந்து கொண்டனர். செயற்கை நுண்ணறிவு, இயந்திர அறிவு, நம்பிக்கை இணையம் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை, மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இது உதவும் என்பதால், நேற்று நடந்த ஸ்டார்ட் அப் மாநாட்டுக்கு வந்த மாணவர்களுக்கு, ஸ்டார்ட் அப் குறித்த புரிதலை ஏற்படுத்தியது. தமிழ்நாடு தொழில்நுட்ப மைய அரங்கில், மாணவ, மாணவியரின் கூட்டம் அலைமோதியது. பெரும் தொழில்நுட்ப சவால்களுக்கு தீர்வு காணவும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதற்கான பணிகளை ஒருங்கிணைக்கவும், தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் செயல்படுகிறது. பெரு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒருங்கிணைந்து, உயர்தொழில்நுட்ப முன்மாதிரி மற்றும் வடிவமைப்பு வசதிகளை அமைத்து உலகளாவிய இணைப்புகளை இம்மையம் உருவாக்குகிறது என்பன போன்ற தகவல்களை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.