ஏ.ஐ., தொழில்நுட்பம், மனிதர்களின் செயல் திறனை உயர்த்தும்
அம்ரிதா விஸ்வ வித்யபீட கல்வி நிறுவனத்தின் மாணவர் துறைத் தலைவர், பிரசன்ன குமார் பேசியதாவது: தொழில்நுட்ப வளர்ச்சியால், வரும் காலங்களில் நாம் வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்ற பயம் தேவையற்றது. கடந்த காலத்தில், 'கால்குலேட்டர்' அறிமுகமான போது, மாணவர்களின் திறன் குறையும் என, எதிர்ப்பு எழுந்தது. அதேபோல், வங்கிகளில், கம்ப்யூட்டர் அறிமுகமான போது, மனிதர்கள் வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்றனர். ஆனால், இவை இரண்டும் நடக்கவில்லை. மாறாக, இவ்விரு சூழல்களிலும், வேலை வாய்ப்புகள் குறையாமல் அதிகரித்துள்ளன. அதேபோல், தற்போது ஏ.ஐ., தொழில்நுட்பம், மனிதர்களை மாற்றிவிடும் என்பது, ஆதாரமற்ற குற்றச்சாட்டு. மனிதர்களின் செயல் திறன்களை உயர்த்தும் கருவியாகவே, இவற்றை நாம் பார்க்க வேண்டும். கம்ப்யூட்டர் அறிவியல் துறையில், புரோகிராமிங், பகுப்பாய்வு, மென்பொருள் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில், அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. இதற்கு தகுந்தாற் போல், மாணவர்கள், தங்கள் தொடர்பு திறன் மற்றும் புதுமையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்வது அவசியம். ஏ.ஐ., தொழில்நுட்பம் என்பது புதிய கருத்து அல்ல. 1970ல் இருந்தே, இதன் அடிப்படை கருத்துகள் இருந்துள்ளன. ஆனால், சமீப காலத்தில், அதன் வளர்ச்சி வேகமடைந்துள்ளது. எனவே, மாணவர்கள் அவற்றை கண்டு பயப்படாமல், அதன் தொழில்நுட்ப நுணுக்கங்களை திறம்படக் கற்று கொண்டு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.