உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்

சென்னை: சட்டசபையில் கவர்னர்உரையை வாசிக்க விடாமல், கோஷம் போட்ட அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.கவர்னர் ரவி நேற்று காலை, 9:25 மணிக்கு வந்தார். அவருக்கு பேண்ட் வாத்தியம் முழங்க, சிவப்பு கம்பளம் விரித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலர் சீனிவாசன் உள்ளிட்டோர் கவர்னரை வரவேற்று, சபைக்குள் அழைத்து வந்தனர். சரியாக, 9:30 மணிக்கு தன் உரையை வாசிக்க கவர்னர் முற்பட்டார். அப்போது இருக்கையில் இருந்து எழுந்த, அ.தி.மு.க., - காங்., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் ஆகியோர், கவர்னர் இருக்கையை நோக்கி வந்தனர்.திடீரென்று அ.தி.மு.க.,வினர் பதாகைகளை உயர்த்தி காட்டினர். கோஷங்கள் எழுப்பியபடியே நின்றனர். இதற்கிடையில், தன் உரையை படிக்காமல், இரண்டு நிமிடங்களில் சபையில் இருந்து வெளியேறிய கவர்னர், நேராக கவர்னர் மாளிகை சென்று விட்டார். தொடர்ந்து, கவர்னர் உரையை தமிழில்சபாநாயகர் அப்பாவு வாசிக்க முயன்றார். அப்போதும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கோஷம் எழுப்பியபடியே நின்றனர்.அப்போது சபாநாயகர், ''திட்டமிட்டு சபையில் கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, அ.தி.மு.க.,வினர் வந்துள்ளனர். அவர்களை சபையில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும்,'' என, காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, சில எம்.எல்.ஏ.,க்களை குண்டுக்கட்டாக, காவலர்கள் துாக்கி சென்றனர். பின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உள்ளிட்டோரும் வெளியேற்றப்பட்டனர். அவர்களை தொடர்ந்து, பா.ஜ., - பா.ம.க.,வின் எம்.எல்.ஏ.,க்களும், சபையை புறக்கணிப்பதாக கூறி வெளியேறினர். இதையடுத்து, கவர்னர் உரையை, சபாநாயகர் தமிழில் வாசித்தார். தன் உரையை காலை, 10:32 மணிக்கு நிறைவு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி