வாசகர்கள் கருத்துகள் ( 1 )
புரக்கனிப்பு எப்படி விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும்? விடியல் விவசாயிகளா?
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள தளவாடப் பொருட்களை கொண்டு செல்வதற்கு கடந்த 6 மாதங்களாக கேரள நீர்வளத்துறை அனுமதி தராததால், நேற்று மத்திய துணை கண்காணிப்பு குழு நடத்திய ஆய்வை தமிழக தரப்பு அதிகாரிகள் புறக்கணித்தனர்.முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் ராகேஷ் காஷ்யப் தலைமையிலான கண்காணிப்பு குழுவிற்கு உதவியாக துணைக் கண்காணிப்புக் குழு மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் தலைமையில் உள்ளது. இக்குழுவில் தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள அரசு சார்பில் செயற்பொறியாளர் லெவின்ஸ் பாபு, உதவி பொறியாளர் கிரண்தாஸ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.இக்குழு 2024 ஜூலை 19ல் அணையின் நீர்மட்டம் 127.35 அடியாக இருந்த போது ஆய்வு மேற்கொண்டது.இந்நிலையில் நேற்று நீர்மட்டம் 120.55 அடியாக இருந்த நிலையில் (மொத்த உயரம் 152 அடி) அணையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக இக்குழு சென்றது. குழுவின் தலைவர் மற்றும் தமிழக தரப்பு அதிகாரிகள் தேக்கடியில் இருந்து படகு மூலம் அணைப் பகுதிக்குச் சென்றனர். கேரள அதிகாரிகள் வல்லக்கடவு வழியாக ஜீப்பில் சென்றனர். புறக்கணிப்பு
முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகள் முழுவதும் தமிழக நீர்வளத் துறையினரால் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஷட்டர் பகுதிகள், மெயின் அணை, காலரி பகுதி, பேபி அணை ஆகியவற்றில் 13 பராமரிப்புப் பணிகள் செய்ய, கேரள நீர்வளத்துறையினரிடம் தமிழக அதிகாரிகள் விண்ணப்பித்து இருந்தனர்.ஆனால் 6 மாதங்களுக்கு மேலாகியும் அனுமதி தரவில்லை. வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே இப்பணிகளை முடித்திருக்க வேண்டும். ஆனால் பராமரிப்புப் பணிகளுக்காக தளவாடப் பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுமதிக்கவில்லை. இதுகுறித்து தமிழக நீர்வளத்துறையினர் பலமுறை கண்காணிப்பு குழு தலைவர், இரு மாநில அரசு செயலர்களுக்கும் கடிதம் அனுப்பி இருந்தனர். எனினும் எவ்வித அனுமதியும் தராததால் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. அப்பணிகளை மேற்கொள்ளாமல் மத்திய துணை கண்காணிப்பு குழு ஆய்வு செய்வதில் பயனில்லை எனக் கூறி குழுவின் தலைவருடன் அணையில் ஆய்வு பணிக்கு செல்லாமல் தமிழக தரப்பு அதிகாரிகள் புறக்கணித்தனர். அதன்பின் குழு தலைவருடன் கேரள தரப்பு அதிகாரிகள் மட்டும் பெயரளவில் அணையை பார்த்துவிட்டு திரும்பினர். ஆலோசனைக்கூட்டம் ரத்து
வழக்கமாக ஆய்வு பணி முடிந்தவுடன் குமுளியில் உள்ள நீர்வளத்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இரு மாநில அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். ஆனால் அக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. விவசாயிகள் மகிழ்ச்சி
முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் தமிழக தரப்பின் உரிமையை நிலைநாட்டும் வகையில் தமிழக தரப்பு அதிகாரிகள் மத்திய துணைக் கண்காணிப்பு குழுவின் ஆய்வு கூட்டத்தை புறக்கணித்ததால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதன்பின் லோயர்கேம்ப் வந்த தமிழக அதிகாரிகளுக்கு பெரியாறு வைகை பாசன விவசாய சங்க நிர்வாகிகள் இனிப்பு வழங்கி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
'கேரள அதிகாரிகளுக்கு
தடை விதிக்க வேண்டும்'
பெரியாறு வைகை பாசன விவசாயம் சங்கம் சார்பில் துணை கண்காணிப்பு குழுவில் தமிழக தரப்பில் உறுப்பினராக உள்ள உதவி செயற்பொறியாளர் குமாரிடம் , லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் கோரிக்கை மனு வழங்கினர்.அதில் கூறியிருப்பதாவது: தமிழக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்குள் தமிழக அதிகாரிகளை தவிர கேரள அதிகாரிகள் அனுமதியின்றி செல்வதை தடுக்க வேண்டும். பேபி அணைக்கு செல்லும் வழியில் பலப்படுத்தும் பணிக்கு இடைஞ்சலாக உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு மத்திய நிறுவள ஆணையம் உத்தரவிட வேண்டும். அணை பராமரிப்பு பணிகளுக்காக கொண்டு செல்லப்படும் தளவாடப் பொருட்களை கேரள நீர்வளத்துறை தடுக்கக் கூடாது. துணை குழுவில் சம்பந்தமில்லாத கேரள நீர்வளத்துறை பொறியாளர்களை குழுவில் இருந்து வெளியேற்ற வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் தமிழ் அன்னை படகிற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். தொடர்ந்து 12 மாதங்கள் அணையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்ற மத்திய நீர்வள ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தமிழக பொறியாளர்கள் மீதான பெரியாறு புலிகள் காப்பகத்தின் தொடர் நெருக்கடிகளை குறைப்பதற்கு நீர்வள ஆணையம் ஆவணம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
புரக்கனிப்பு எப்படி விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும்? விடியல் விவசாயிகளா?