வரி வருவாயில் 50 சதவீதம் ஒதுக்க அன்புமணி கோரிக்கை
சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:மாநிலங்களில் இருந்து கிடைக்கும் மத்திய அரசின் வரி வருவாயை, மத்திய, மாநில அரசுகள் எந்த விகிதத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்பது குறித்து, விவாதிப்பதற்காக, அரவிந்த் பனகாரியா தலைமையிலான, 16ம் நிதி ஆணையத்தின் குழு, நான்கு நாள் பயணமாக சென்னை வந்துள்ளது.முதல்வர் உள்ளிட்டோருடன், இந்த குழு நடத்த உள்ள கலந்தாய்வுகள் பயனளிக்க வேண்டும். அதற்கான பங்களிப்பை, தமிழக அரசு வழங்க வேண்டும். நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்ட நாளில் இருந்து, மத்திய அரசின் வரி பகிர்வில், தமிழகம் உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. மத்திய அரசின் மொத்த வரி வருவாயில், 41 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதேநேரத்தில், இந்த வரி வருவாயில், தமிழகத்தின் பங்களிப்பு, 10 சதவீதம். ஆனாலும், தமிழகத்திற்கு, 4.079 சதவீதம் மட்டுமே வரி வருவாய் கிடைக்கிறது.கடந்த 30 ஆண்டுகளில், தமிழகத்திற்கான ஒதுக்கீடு பாதியாக குறைந்து விட்டது. இது, மிகப்பெரிய பொருளாதார அநீதி. இதை களையும்படி, 16வது நிதி ஆணைய குழுவிடம், தமிழக அரசு உரிய காரணங்களை விளக்க வேண்டும். மத்திய அரசின் வரி வருவாயில், மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு, 41 சதவீதத்தில் இருந்து, 50 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும். மாநிலத்தில் இருந்து எவ்வளவு வரி வருவாய் வசூலிக்கப்படுகிறதோ, அதில், 50 சதவீதத்தை, அந்த மாநிலத்திற்கு வழங்கும் வகையில், நிதிப்பகிர்வு கொள்கை வகுக்கப்பட வேண்டும்.நிதி ஆணைய குழுவிடம், இதை தமிழக அரசு எடுத்துச் சொல்லி, அதை உறுதியாக வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.