சென்னை : 'தனியார் கட்டடங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்கு, சொந்த கட்டடம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:
வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு சாலைப்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான வீட்டின் கட்டடத்தில், ஐந்து ஆண்டுகளாக போதிய வசதிகள் இன்றி இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில், 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். மழையின் காரணமாக, இந்த கட்டடத்தின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்துள்ளது. அதிகாலை என்பதால், குழந்தைகள் யாரும் இல்லாமல், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுதும், 7,441 அங்கன்வாடி மையங்கள், தனியாருக்கு சொந்தமான கட்டடங்களில் இயங்கி வருகின்றன. சொந்த கட்டடம் கட்ட, தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. தனியார் கட்டடங்களில், இதுபோல விபத்துகள் நேரிடும்போது, குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? ஊர் ஊராகச் சென்று, தன் தந்தையின் சிலையை வைக்க தெரிந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி வழங்கும் அங்கன்வாடி கட்டடங்கள் கட்ட ஏன் மனம் வரவில்லை? வீண் விளம்பரங்களுக்கு செலவிடவா மக்கள் வரிப்பணம்? உடனே, அங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டடம் கட்ட நிதி ஒதுக்கி, அதற்கான பணிகளை துவக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புல் அவுட்: வழிநடத்தியது யார்? அவர்களே பொறுப்பு சனாதன தர்மத்தின் துாண்களில் ஒன்றான, கர்நாடகாவில் உள்ள தர்மஸ்தலா கோவிலை இழிவுபடுத்தும் ஒரே நோக்கத்துடன், ஒரு மாதத்திற்கும் மேலாக அவதுாறு பரப்பியதை, கர்நாடகா அரசு சாதாரணமாக எடுத்து கொண்டது கவலை அளிக்கிறது. இது, ஒரு மனிதனின் செயல் மட்டுமல்ல; ஒரு பெரிய சதி. முகமூடி அணிந்த நபரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு, ஒரு துளி கூட ஆதாரமின்றி சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியது, கர்நாடகா காங்கிரஸ் அரசின் முட்டாள்தனம். முகமூடி அணிந்த நபரின் கைது, இந்த விஷயத்தின் முடிவாக கருத முடியாது. அவரை வழிநடத்தியது யார், அவருக்கு யார் நிதியளித்தது, தர்மஸ்தலாவை அவதுாறு செய்வதன் வாயிலாக யாருக்கு லாபம் என்ற கேள்விகள் எழுகின்றன. இந்த சதியின் உண்மையான சூத்திரதாரிகளை அம்பலப்படுத்தி, பொறுப்பேற்க வைக்க வேண்டும். - அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,