உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை

சென்னை: நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்திய, சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேநேரத்தில், 30 ஆண்டுகள் வரை எவ்வித தண்டனை குறைப்பும் வழங்கக்கூடாது என்றும், நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.சென்னை அண்ணா பல்கலை மாணவி, அதே வளாகத்தில் கடந்தாண்டு டிசம்பர் 23ல், சக மாணவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், மாணவரை அடித்து விரட்டிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து, மாணவி அளித்த புகாரை அடுத்து, கோட்டூர்புரம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க., அனுதாபி ஞானசேகரனை, 37, டிச., 25ல் கைது செய்தனர். ஞானசேகரனுக்கு எதிராக திருட்டு உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்ததை அடுத்து, இந்தாண்டு ஜனவரி 5ல், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.உயர் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கை விசாரித்த மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை மற்றும் 70க்கும் மேற்பட்ட சான்று ஆவணங்களை பிப்ரவரியில் தாக்கல் செய்தது. இதையடுத்து, வழக்கு விசாரணை சென்னை அல்லி குளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மார்ச் 7ல் மாற்றப்பட்டது.

11 பிரிவுகள்

ஏப்ரல் 8ல், தகவல் தொழில்நுட்ப சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பி.என்.எஸ்., என்ற பாரதிய நியாய சன்ஹிதா சட்டங்களின்படி, 10க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ், ஞானசேகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. சாட்சிகள் விசாரணை ஏப்ரல் 23ல் துவங்கியது. மகளிர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டதால், பொறுப்பு நீதிபதியான சென்னை, 'போக்சோ' சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி விசாரித்தார்.இந்த வழக்கு தினமும் விசாரிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவி உட்பட 29 பேர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். காவல் துறை தரப்பில் ஞானசேகரனுக்கு எதிராக, 73 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. போலீசார் தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.மேரி ஜெயந்தி, “இந்த வழக்கை அரிதிலும் அரிதானதாக பார்க்க வேண்டும். வேறு எந்த பெண்ணும், இதுபோல மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். ''இந்த தண்டனை குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்,” என்று வாதாடினார்.ஞானசேகரன் தரப்பில், சட்டப்பணிகள் ஆணைக்குழு வாயிலாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் ஜி.பி.கோதண்டராமன், டி.ஆர்.ஜெயபிரகாஷ் நாராயணன் ஆஜராகி, 'சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே, இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 'குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. வழக்கு குறுகிய காலத்தில் அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டுள்ளது. எனவே, குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும்' என்றனர்.இருதரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதை அடுத்து, ஞானசேகரன் குற்றவாளி என பொறுப்பு நீதிபதி எம்.ராஜலட்சுமி மே 28ல் தெரிவித்தார்; தண்டனை விபரம் ஜூன் 2ல் அறிவிக்கப்படும் என்றார்.

ஆயுள் தண்டனை

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, 'போக்சோ' சிறப்பு நீதிமன்றத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஞானசேகரன் நேற்று காலை 10:30 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டார். காலை 10:39க்கு, ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளை ஒவ்வொன்றாக கூறி, அந்த குற்றச்சாட்டுகளுக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை மற்றும் அபராதம் என நீதிபதி தெரிவித்தார்.பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் கீழ், ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். அத்துடன், 30 ஆண்டுகள் வரை அவருக்கு எந்தவித தண்டனை குறைப்பும் வழங்கக்கூடாது என்றும் தெரிவித்தார். பொதுவாக ஆயுள் தண்டனை கைதிகள், நன்னடத்தை அடிப்படையிலும், கட்சி தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டும், அரசால் முன்னரே விடுவிக்கப்படுவர். ஒருசில நேரங்களில், சிறை அதிகாரிகளும் நன்னடத்தை அடிப்படையில், கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசுக்கு பரிந்துரை செய்வர். அவ்வாறு எந்த சலுகையும் ஞானசேகரனுக்கு, 30 ஆண்டுகளுக்கு வழங்கக்கூடாது என்பதையே, நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.மீதமுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தனித்தனியே தண்டனை வழங்கிய நீதிபதி, அவற்றை குற்றவாளி ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். அபராதமாக விதிக்கப்பட்ட மொத்தம், 90,000 ரூபாயை, பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.பாராட்டு பாதிக்கப்பட்ட மாணவி உட்பட 29 பேரின் சாட்சியங்கள், அரசு தரப்பு மற்றும் ஞானசேகரன் தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் உள்ளிட்ட விபரங்களுடன், 208 பக்கங்கள் உடைய தீர்ப்பின் நகல், ஞானசேகரன் தரப்புக்கு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் சாட்சியம் அளித்த அண்ணா பல்கலை மாணவ, மாணவியரின் பெயர் விபரங்கள் வெளியில் தெரியாதபடி, போலீசார் மற்றும் நீதிமன்றத்தால் ரகசியமாக கையாளப்பட்டன. சாட்சிகள் விசாரணைக்கு வந்த போது, அவர்களின் அடையாளங்கள் வெளியே தெரியாதவாறு பார்த்துக் கொள்ளப்பட்டன.சிறப்பு புலனாய்வு குழுவைச் சேர்ந்த மூன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளும், அரசு சிறப்பு வழக்கறிஞரும், மிக திறமையாக செயல்பட்டுள்ளதாக, நீதிபதி எம்.ராஜலட்சுமி பாராட்டு தெரிவித்தார்.

விபரம்

 ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் பாலியல் வன்கொடுமை சட்டத்தில், 30 ஆண்டுகள் வரை எவ்வித தண்டனை குறைப்பும் இல்லாமல், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அத்துமீறி நுழைதல் - மூன்று மாதம் சிறை சட்டவிரோதமாக தடுத்தல் - ஒரு மாதம் சிறை வலுக்கட்டாயமாக கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல் - 10 ஆண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம் சட்டவிரோதமாக அடைத்து வைத்து துன்புறுத்துதல் - ஓராண்டு சிறை பாலியல் தொல்லை, விருப்பத்துக்கு மாறாக ஆபாச புகைப்படங்களை காண்பித்தல் - மூன்று ஆண்டு சிறை நிர்வாணமாக இருக்க கட்டாயப்படுத்தி தாக்குதல் - ஏழு ஆண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம் கொலை மிரட்டல் விடுத்தல் - ஏழு ஆண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம் ஆதாரங்களை அழித்தல் - மூன்று ஆண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம் தனிநபர் அந்தரங்கத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்துதல் - மூன்று ஆண்டு சிறை, 25,000 ரூபாய் அபராதம் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில், அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டதால், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவில் தண்டனை இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

பேசும் தமிழன்
ஜூன் 03, 2025 07:45

அவனுக்கு என்ன கொரோனோவா... முகத்தை மறைத்து கொண்டு போகிறான் ??


ஜூன் 03, 2025 07:02

தண்டனை கனகரென்ஸ் என்று இருக்கிறது ...கண்சிசுட்டிவ் என்று இல்லை ...வித்தவுட் ரெமிசன் என்று இல்லை ..எனவே அவன் அடுத்த ஆண்டே வெளிவரலாம் ,,,இன்னும் படு வேகத்துடன் பெண்களை மானபங்கம் செய்யலாம்


Kasimani Baskaran
ஜூன் 03, 2025 04:08

உயர் அதிகாரிகளே பொது வெளியில் வந்து சார் பற்றி தேவையில்லாமல் முட்டுக்கொடுத்து மிக அபத்தமான செயல்.


சமீபத்திய செய்தி