ஏர்போர்ட் மூர்த்தி கைதுக்கு அண்ணாமலை கண்டனம்
சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தை விட, கேடுகெட்ட ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்திக் கொண்டிருப்பதாக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வெளியே புரட்சி தமிழகம் கட்சியின் தலவைர் ஏர்போர்ட் மூர்த்தி மீது விசிகவினர் தாக்குதலை நடத்தினர். பதிலுக்கு அவரும் தாக்கியுள்ளார். இதையடுத்து, ஏர்போர்ட் மூர்த்தி மீது சென்னை போலீஸில் விசிகவினர் புகார் அளித்தனர். அதன்பேரில், ஏர்போர்ட் மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். ஏர்போர்ட் மூர்த்தி கைது சம்பவத்திற்கு பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை; புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது, டிஜிபி அலுவலக வாயிலில் வைத்து, விசிக கட்சி ரவுடிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்ட விசிக ரவுடிகளை விட்டுவிட்டு, தன்னை தற்காத்துக்கொள்ள முயற்சித்த ஏர்போர்ட் மூர்த்தியைக் கைது செய்திருக்கிறது திமுக அரசின் காவல்துறை.மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 2006 - 2011 ஆட்சிக்காலத்தை விட, கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார், அவரது மகன் முதல்வர் ஸ்டாலின், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.