நவீனை மிரட்டியது யார் அண்ணாமலை சந்தேகம்
சென்னை:'சந்தேகமான முறையில் இறந்த நவீனை மிரட்டியது யார்' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை:முழுக்க முழுக்க சந்தேகமான முறையில் கிடைத்த நவீன் உடலை வைத்து, தற்கொலை என்ற உறுதியான முடிவுக்கு, எப்படி வந்தது, தி.மு.க., அரசின் காவல் துறை. பணம் கையாடல் செய்ததாக கூறப்படும் புகார் வந்து, இரு வாரங்கள் கடந்தும், விசாரணை நடத்தவில்லை என்பது, காவல் துறைக்கு அசிங்கமில்லையா?நவீன் அனுப்பியதாக கூறப்படும் மின்னஞ்சல், அவரின் மொபைல் போனில் இருந்து அனுப்பப்பட்டதா அல்லது அவரது கணினியில் இருந்து அனுப்பப்பட்டதா?மின்னஞ்சலில், திருமலா பால் நிறுவன அதிகாரிகள் சிலர், நவீனை மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. காவல் துறை முன்பே விசாரித்திருந்தால் நவீன் நேரடியாக, காவல் துறையிடம் தெரிவித்து இருக்க மாட்டாரா.நவீனை, தனியாக விசாரித்ததாக குற்றஞ் சாட்டப்படும், கொளத்துார் துணை கமிஷனர் பாண்டியராஜனிடம் விசாரித்தது குறித்த அறிக்கை எத்தனை நாட்களில் வெளியிடப்படும் என்ற தகவலும் இல்லை. காவல் துறைக்கு பொறுப்பான முதல்வர், இந்த சம்பவத்திற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.