உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாமலை சாட்டையடி போராட்டம் தேர்தல் தோல்விக்கு பரிகாரம்: சேகர்பாபு

அண்ணாமலை சாட்டையடி போராட்டம் தேர்தல் தோல்விக்கு பரிகாரம்: சேகர்பாபு

வில்லிவாக்கம்:''லோக்சபா தேர்தல் தோல்விக்காக செய்யும் பரிகாரமே, அண்ணாமலை அறிவித்திருக்கும் சாட்டையடி போராட்டம்,'' என, அமைச்சர் சேகர்பாபு கிண்டல் அடித்தார்.சென்னையில், அவர் அளித்த பேட்டி:சபரிமலையில் மண்டல கால பூஜை முடிந்து, அடுத்த மகர விளக்கு பூஜைக்காலம் துவங்க உள்ளது. சுவாமிக்காக மாலை அணிந்து இருப்பவர் சிலர், காலில் செருப்பு போடாமல் இருப்பர். நான் கூட சபரிமலைக்கு செல்லும்போது காலில் செருப்பு அணிய மாட்டேன். அப்படித்தான் காலில் செருப்பு அணிய மாட்டேன்; முதல்வர் வீட்டு முன்பாக சவுக்கடி போராட்டம் நடத்துவேன் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். லோக்சபா தேர்தலுக்கு முன், 'நிச்சயமாக கொங்கு மண்டலத்தில், அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்; தி.மு.க., 40 தொகுதிகளில், ஒன்றில் கூட, டிபாசிட் வாங்காது' என அண்ணாமலை தன்னுடைய பேட்டியில் தெரிவித்திருந்தார். 'நாங்கள் தான் ஜெயிப்போம். எழுதி வைத்துக் கொள்ளுங்கள்'என்றெல்லாம் சவால் விட்டும் சொல்லி இருந்தார். அதெல்லாம் பொய்த்து விட்டது. அதனால், பரிகாரம் தேடும் விதமாக, முதல்வர் வீட்டின் முன், சவுக்கடி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். கூடவே, தி.மு.க., ஆட்சி அகற்றப்படும் வரை, செருப்பு அணிய மாட்டேன் என்றும் சொல்லி இருக்கிறார். அண்ணாமலை காமெடிக்கு அளவே இல்லை. சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்தில் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை நடுநிலையாளர்கள் அனைவரும் பாராட்டுகின்றனர். தமிழக முதல்வர் உத்தரவிட்டுத்தான், காவல் துறையில் அனைத்து பணிகளும் நடக்கின்றன. முதல்வர் ஸ்டாலின் உறக்கத்தில் இருப்பவர் அல்ல; 24 மணி நேரமும் ஓய்வின்றி உழைக்கிறார். மக்களோடு மக்களாக நின்று களப்பணியாற்றுகிறார். மக்களுக்காக போராடுகிறார். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியாக இருப்பதால்தான், நாமெல்லாம் நிம்மதியாக பணியாற்றுகிறோம். சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்றால், வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுபவர்கள் எல்லாம் எப்படி சுதந்திரமாக நடமாட முடியும். நாட்டிலேயே, சட்டத்தின் ஆட்சி நடக்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான். பாதிக்கப்பட்ட மாணவி குறித்த தகவல்கள் வெளியானது எப்படி என்று கேட்கின்றனர். குற்றவாளியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தச் சென்ற போது, முதல் தகவல் அறிக்கை வெளி வந்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை