செஞ்சி தம்பதி கொலையில் மேலும் ஒருவர் கைது
செஞ்சி: செஞ்சி அருகே சொத்து தகராறில் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த திருவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் மரியதாஸ்,80; இவரது மனைவி செலின்மேரி, 76; மரியதாஸ் சகோதரி பெரியநாயகி, 83; திண்டிவனம் அடுத்த பாஞ்சாலம் கிராமத்தில் வசித்து வந்தார்.இவர்களுக்குள் நீண்ட நாட்களாக சொத்து பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 6ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் இறந்த பெரியநாயகியின் கணவர் சவரிமுத்து உடலை, பிரச்சனைக்குறிய நிலத்தில் பெரியநாயகி குடும்பத்தார் புதைத்தனர். இதையறிந்த மரியதாசும், அவரது மனைவி செலின்மேரியும் சவரிமுத்துவின் கல்லரையை நேற்று முன்தினம் உடைத்து சேதப்படுத்தினர்.இதனால் ஆத்திரமான பெரியநாயகியின் மகள் வழி பேரன் அபிஷேக் ஆவின் ராஜ் 24; நேற்று முன்தினம் மாலை மரியதாசையும், செலின் மேரியையும் சம்மட்டியால் அடித்து கொலை செய்தார். செஞ்சி போலீஸ் அபிஷேக் ஆவின் ராஜை கைது செய்தனர். இந்நிலையில், இறந்து போன மரியதாசின் உறவினர்கள் நேற்று காலை 10:00 மணிக்கு, திருவம்பட்டு மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் பேச்சுவார்த்தையை ஏற்காததால், பொறுப்பு டி.எஸ்.பி., மனோகரன், தாசில்தார் செல்வகுமார் பேச்சு வார்த்தை நடத்தி 11.30 மணியளவில் சமாதானம் செய்தனர். மறியல் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.கொலை செய்யப்பட்ட மரியதாஸ் பேரன் ஜவஹர் பாரதி கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார், அபிஷேக் ஆல்வின் ராஜ் உட்பட அவரது உறவினர்கள் 8 பேர் மீது வழக்கு பதிந்தனர். அபிஷேக் ஆல்வின் ராஜ் ஏற்கனவே, கைது செய்யப்பட்டதால், அவரது பெரியம்மா சம்பூர்ணம், 55; என்பவர நேற்று கைது செய்தனர்.