| ADDED : பிப் 15, 2025 10:11 PM
சென்னை: நெல்லை மாவட்டத்தின் ராதாபுரம் வட்டத்தில் 15 குவாரிகளுக்கு அனுமதித்துள்ள உரிமத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:கேரளாவுக்கு கருங்கல் ஜல்லி, எம் சாண்ட் கொண்டு செல்வதற்காக, நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் 15 குவாரிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.தமிழக கனிம வளங்களை சூறையாட அரசே அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது.குவாரி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் உரிமம் வழங்கப்பட்டதன் பின்னணி பற்றி விரிவான விசாரணை நடத்தவும் அரசு ஆணையிடவேண்டும்.நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்தும், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இருந்தும் கருங்கல் ஜல்லிகள் உள்ளிட்ட கனமவளங்கள் பெருமளவில் கேரளத்திற்கு கடத்திச் செல்லப்படுகின்றன. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.ஆனால், தமிழக அரசோ இயற்கை வளங்களை அழிக்கிறது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் மட்டும் 15 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதை தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அளித்துள்ள தகவல் உறுதி செய்திருக்கிறது.கேரளத்துக்கு கனிம வளம் அதிக அளவில் கொண்டு செல்லும் நிறுவனங்களும், குவாரிகளும் தமிழக சட்டமன்றத் தலைவர் அப்பாவுவின் தொகுதியில்தான் உள்ளன. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களையும், மண்ணையும், மக்களையும் காப்பதில் அவருக்கு அதிக அக்கறை இருக்கும். இத்தகைய தவறான செயல்கள் நடைபெறுவதை தடுத்து நிறுத்துவது தான் அவரது முதன்மைக் கடமையாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.