கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் நியமனம்
சென்னை:தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக, கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக கே.சந்திரமோகன், எம்.சுரேஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக பி.எஸ்.ராமன் உள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக ஆறு பேர் உள்ளனர்; மதுரை கிளையில் இருவர் உள்ளனர். தற்போது, புதிதாக வழக்கறிஞர்கள் கே.சந்திரமோகன் மற்றும் எம்.சுரேஷ்குமாரை, கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.அரியலுாரில் பிறந்தவர் சந்திரமோகன்; இவரது தந்தை ஆர்.கருப்பையா, அரியலுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். திருச்சி சட்டக்கல்லுாரியில் சட்ட படிப்பை முடித்த சந்திரமோகன், 1985ல் வழக்கறிஞராக பதிவு செய்தார். கடந்த 2005 - 11ல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவராக பதவி வகித்தார். 25 ஆண்டுகளாக பார் கவுன்சில் உறுப்பினராக உள்ளார். தமிழக காங்கிரஸ் சட்ட துறையின் தலைவராகவும் உள்ளார்.கூடுதல் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள எம்.சுரேஷ்குமார், 1971ல் பிறந்தார். இவரது தந்தை முத்தையா, மாவட்ட நீதிபதியாக பதவி வகித்தவர். 1994ல் வழக்கறிஞராக சுரேஷ்குமார் பதிவு செய்தார். உயர் நீதிமன்றத்திலும், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திலும் ஆஜராகி வருகிறார். மின் வாரியம், மதுரை மாநகராட்சி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, தெற்கு ரயில்வே, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை சார்பில் ஆஜராகி உள்ளார்.