வெடிகுண்டுகள் வாங்கி கொடுத்தேன் டில்லியில் கைதான அப்பு வாக்குமூலம்
சென்னை: 'சம்பவம் செந்தில் கேட்டதால், என் பரம எதிரியான மலர்க்கொடியுடன் இணைந்து, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய, வெடிகுண்டுகள் வாங்கி கொடுத்தேன்' என, டில்லியில் கைதான ரவுடி புதுார் அப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், புதுார் அப்பு என்ற ரவுடி தேடப்பட்டு வந்தார். அவரை, தனிப்படை போலீசார் டில்லியில் நேற்று கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர்.போலீசாரிடம் புதுார் அப்பு அளித்த வாக்குமூலம்:என் குருநாதர் மயிலாப்பூர் சிவகுமார், தோட்டம் சேகரை 2001ல் வெட்டிக் கொன்றார். அதற்கு பழிவாங்கும் வகையில், தோட்டம் சேகர் மகன் அழகுராஜா உள்ளிட்டோர், 20 ஆண்டுகள் கழித்து சிவகுமாரை கொன்றனர். இதனால், தோட்டம் சேகர் மனைவி மலர்க்கொடி, அழகுராஜா உள்ளிட்டோர் எனக்கு பரம எதிரிகளாக மாறினர். ஆனால், என் தொழில் விஷயத்தில் அவர்கள் தலையிடுவது இல்லை. நான் ரவுடிகளுக்கு வெடிகுண்டுகள் சப்ளை செய்து வந்தேன். ரவுடிகள் வெடிகுண்டுகளை பந்து என்று அழைப்பர்.அந்த வகையில் தான், மலர்க்கொடி தன் ஆட்களை அனுப்பி, நான்கு பந்துகள் வேண்டும் என்று கேட்டார். எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால், 'பந்து' வாங்கி கொடுக்க தாமதம் செய்தேன்.பந்துகளை எதற்காக கேட்கிறார் என, சம்பவம் செந்தில் தான் தெளிவுபடுத்தினார். அவர் எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார்.எனவே, அவரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு, என் பரம எதிரியான மலர்க்கொடியுடன் சேர்ந்து, ஆந்திராவில் இருந்து நான்கு வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்தேன்.இவ்வாறு அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.