சென்னை, 'பொது இடங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற, ஏப்ரல் 21 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது; அதற்குள் அகற்ற வேண்டும்' என, அரசுக்கு கெடு விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:பாரிமுனையில் உள்ள பஸ் நிலையத்தை, ராயபுரத்துக்கு இடமாற்றம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது; ராயபுரத்தில் நவீன முறையில் பஸ் நிலையத்தை கட்டவும் திட்டமிட்டுள்ளது. நெரிசல் பகுதி
பஸ் நிலையம் அமையவுள்ள இடத்தின் முன் பகுதியில் கொடிக்கம்பம் அமைந்துள்ளது. ஏற்கனவே, இப்பகுதி சாலை மிகவும் குறுகலானது; போக்குவரத்து நெரிசல் மிகுந்தது. சாலையை விரிவுபடுத்தி, அங்குள்ள கொடிக் கம்பத்தை அகற்ற வேண்டும்.ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம்., அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகியவை, வடசென்னை பகுதி மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்கின்றன. என்.ஆர்.டி., பழைய மேம்பாலம் மற்றும் புதிய ஜங்ஷன் ஆகியவை, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகள்.இந்த ராயபுரம் ஜங்ஷனின் நடைபாதையை மறித்து, கடந்த இரு மாதங்களுக்கு முன், தி.மு.க., கட்சி கொடிக் கம்பம் மற்றும் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஏராளமான கொடிக் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. இது, விபத்து நிறைந்த பகுதி. இங்குள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பு, நடைபாதை ஆக்கிரமிப்பு காரணமாக, சாலையில் நடந்து செல்லும் அப்பகுதி மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, பல முறை புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சியின் ஐந்தாவது மண்டல அதிகாரியிடமும் நேரில் சந்தித்து, புகார் அளித்துள்ளேன். போலீசார் தயக்கம்
சட்டவிரோத ஆக்கிரமிப்புகளால், ஆர்.எஸ்.ஆர்.எம்., மகப்பேறு மருத்துவமனைக்கு வரும் பெண்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. போக்குவரத்து போலீசாரும், என் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.எனவே, நெரிசல் மிகுந்த சாலையில் சட்டவிரோதமாக உள்ள கொடிக் கம்பம், கல்வெட்டுகளை அகற்ற, கலெக்டர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி முகமது ஷபீக் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''தமிழகம் முழுதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை, 12 வாரங்களில் அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. ''தனி நீதிபதியின் உத்தரவை, இரு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்சும் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்,'' என்றார்.அரசு தரப்பு வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், 'நீதிமன்றம் ஏற்கனவே அளித்த காலக்கெடு ஏப்., 21ம் தேதி முடிகிறது. 'அதற்குள், மாநிலம் முழுதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும். அகற்றவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம்' என்று உத்தரவிட்டனர்.