ஆதி திராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ஏற்பாடு
மதுரை : தமிழகத்தில் ஆதிதிராவிடர்களுக்கான காலிமனையிடங்களை கண்டறிந்து, தகுதியானவர்களை தேர்வு செய்து இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க ஏற்பாடு செய்யும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இலவச வீட்டுமனைப் பட்டா அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே தயார் செய்து ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படாமல் விடுபட்டுப் போன வீட்டுமனைப் பட்டாக்களும் உள்ளன. அவற்றை மீண்டும் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கும் வகையில் ஆய்வு செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது.அதற்காக ஒவ்வொரு தாலுகாவிலும் வருவாய் அலுவலர்களைக் கொண்ட குழு அமைக்கும்படியும், அக்குழு மூலம் வீட்டுமனைகளை நுாறு சதவீதம் கள ஆய்வு செய்யவும், அதற்கு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளனர். இப்பணியில் தாசில்தார்கள் 50 சதவீதம் ஆய்வு செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் நலஅலுவலரான தனித்தாசில்தார், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தனித்தாசில்தார் ஆகியோர் மீதியுள்ள 50 சதவீத ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு வி.ஏ.ஓ.,க்கள், வருவாய் ஆய்வாளர்கள், மண்டல துணைத் தாசில்தார்கள் ஆகியோரைக் கொண்டதாக குழு அமைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.மதுரை வருவாய் கோட்டத்தில், ஆதிதிராவிடர் நத்தத்தில் 618 காலிமனைகள், பிற்படுத்தப்பட்டோர் நத்தத்தில் 40 காலிமனைகள் தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளன. இதுபோன்றவற்றை மீண்டும் ஆய்வு செய்து வழங்க உள்ளனர். இதுபற்றி கடந்த செப்.9ல் மதுரையில் துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனை செய்துள்ளனர். அதனடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.