பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 181 ரவுடிகள் கைது
சென்னை,: நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாக இருந்த, 181 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில், ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் முடுக்கி விட்டுள்ளார். அதன் அடிப்படையில், தலைமறைவாக உள்ள ரவுடிகளை, போலீசார் தேடி வருகின்றனர். ஜாமினில் வெளிவந்த பின், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ள ரவுடிகள் குறித்த பட்டியலை தயாரித்துள்ளனர். அவர்களில், நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட, 181 ரவுடிகள் ஒரு மாதத்தில் கைது செய்யப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
தலைமறைவாக இருக்கும் ரவுடிகள், நீதிமன்றங்களில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தால், அவர்களுக்கு ஜாமின் கிடைக்க உதவிய நபர்கள் மீதும், தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம். 41 ரவுடிகளின் சொத்துக்களை முடக்க உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.