மேலும் செய்திகள்
தமிழக வி.சி.,யினர் மீது வன்னியர் சங்கம் புகார்
06-Nov-2024
சென்னை:'வன்னியர்களை அவமதிக்கும் வகையில் பேசிய வி.சி., நிர்வாகிகளை, 24 மணி நேரத்தில் கைது செய்யாவிட்டால், போராட்டம் நடத்துவோம்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:கடலுார் மஞ்சக்கொல்லை கிராமத்தில், கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு, நேரில் சென்று ஆறுதல் கூறியதற்காக, வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழியின் தலையை வெட்டுவோம் என்று, வி.சி., நிர்வாகிகள் பேசியுள்ளனர். அவர்களை கைது செய்யாமல், காவல் துறையினர் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர்கள், பட்டியலினத்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டால், அது சட்டம் - ஒழுங்கை மட்டுமின்றி, வளர்ச்சியையும் பாதிக்கும். அதனால்தான் வன்னியர், பட்டியலினத்தவர்கள் இடையை அமைதி, நல்லிணக்கத்தை ஏற்படுத்த, 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறேன். ஆனால், இரு சமூகங்களும் ஒன்றுபட்டால், தங்களின் அரசியல் வணிகம் நடக்காது என்று அஞ்சும் சில கும்பல்கள், தொடர்ந்து வன்முறையை துாண்டி வருகின்றன. வன்னியர்களும், பட்டியலினத்தவரும் நட்புடன் வாழ வேண்டும், பட்டியலின மக்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பது தான் எனது நோக்கம். இந்த நோக்கத்தை சிதைக்கும் வகையிலான எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது என, பா.ம.க., நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டு, கட்டுப்படுத்தி வைத்திருக்கிறேன். இது எங்களின் நல்ல நோக்கமே தவிர, பலவீனம் அல்ல. அதே நேரத்தில் கொட்டக் கொட்ட குனிந்து கொண்டிருக்கவும் மாட்டோம். வன்னியர்களை அவமதிக்கும் வகையில் பேசிய வி.சி., நிர்வாகிகளை, 24 மணி நேரத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இல்லையெனில், எத்தனை தடைகள் போடப்பட்டாலும், அவற்றை மீறி கடுமையான போராட்டங்களை பா.ம.க., நடத்தும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
06-Nov-2024